சிறப்புக் கட்டுரைகள்

மகளிர் மருத்துவம்- தாம்பத்திய உறவு இல்லாமையை சரிசெய்து குழந்தை பாக்கியம்!

Published On 2025-03-12 14:46 IST   |   Update On 2025-03-12 14:46:00 IST
  • தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத தம்பதிகள் பலர் உள்ளனர்.
  • முறையான சிகிச்சை பெற்றால், 100 சதவீதம் தாம்பத்திய உறவு இல்லாமையை சரி செய்ய முடியும்.

குழந்தை பாக்கியத்துக்கு அடிப்படையே தாம்பத்திய உறவுதான். ஆனால் கணவன், மனைவி பலர் தாம்பத்திய உறவு கொள்வதில்லை. இதனால் அவர்கள் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகளை கடந்த காலங்களில் இருந்தே நாங்கள் பார்த்து வருகிறோம். ஆனால் இப்போது இதுபோன்ற பிரச்சினைகள் இன்னும் அதிகமாக காணப்படுகிறது.

ஆனால் அவர்கள் அனைவருக்கும் நான் சொல்கிற ஒரு விஷயம், ஒவ்வொரு தம்பதியரும், தாம்பத்திய உறவு இல்லாமையை முழுமையாக சரி செய்து குழந்தை பாக்கியம் பெற முடியும். தாம்பத்திய உறவு இல்லாமையை 100 சதவீதம் சரிப்படுத்த முடியும்.

 

தாம்பத்திய உறவு பற்றி புரிதல் இல்லை:

நிறைய நேரங்களில் இதைப்பற்றி பேச கவலையாக இருப்பதாகவும், இது ஒரு கூச்சமான விஷயமாக இருப்பதாகவும் நிறைய தம்பதிகள் சொல்கிறார்கள். தாம்பத்திய உறவு ஏன் செய்கிறோம், இது எதனால் நடக்கிறது, இது சரியா தவறா என்று அவர்களுக்கே தெளிவான புரிதல் இல்லை. பல நேரங்களில் ஆண், பெண் உறவுகள் பற்றி பல தம்பதிகளுக்கு எதுவுமே தெரிவதில்லை. பெண்ணின் வஜினா (யோனி) என்றால் என்ன என்று தெரியாது. வஜினாவில் எது நுழைவு புள்ளி என்பது கூட நிறைய தம்பதிகளுக்கு தெரிவதில்லை.

அதற்கடுத்து பலர் இதை சமூக விஷயங்களாகவும் பார்க்கிறார்கள். ஆண், பெண் உறவு என்பது தவறானது, இதைப்பற்றி பேசுவது தப்பு, எனவே தாம்பத்திய உறவு இல்லாமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தவறான எண்ணங்கள் உள்ளது. அது தவிர பல நேரங்களில் சிறு வயதில் ஏற்படுகிற பாலியல் வன்கொடுமை காரணமாக பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு அதனால் தாம்பத்திய உறவு கொள்வதை பிரச்சினையாக கருதுகிறார்கள்.

அதேபோல் ஆண்களையும் எடுத்துக்கொண்டால், தாம்பத்திய உறவு என்றால் நிறைய நேரங்களில் பெண்களை கஷ்டப்படுத்தும் விஷயம் என்ற தவறான கண்ணோட்டத்துடன் உள்ளனர். இது ஒரு தவறான விஷயம் என்கிற மனநிலையும் பல ஆண்களிடம் உள்ளது. இவை அனைத்தும் தான் இவர்கள் தாம்பத்திய உறவு கொள்வதில் தடையாக இருக்கிற விஷயம். இதனால் தாம்பத்திய உறவு கொள்ள மாட்டார்கள்.

ஆண்களை பாதிக்கும் 3 முக்கிய விஷயங்கள்:

இன்றைக்கும் பல ஆய்வுகள் தெரிவிக்கும் தகவலின்படி, ஆண்களை பொருத்தவரைக்கும், 3 முக்கியமான விஷயங்களால் பாதிக்கப்படுகிறார்கள். முதலாவது போதிய விறைப்புத்தன்மை இல்லாதது, இரண்டாவது தாம்பத்திய உறவு கொள்ளும் முன்பே உயிரணு வெளியாகி விடுவது, அதனால் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது.

மூன்றாவதாக, ஆண்களை பொருத்தவரை மன ரீதியான பிரச்சினைகள் ஆகும். அது குறிப்பாக அவர்களுடைய சமூகம் மற்றும் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை, அதனை பாதிக்கிற மருந்துகள், உடல் ரீதியிலான பிரச்சினைகள் ஆகியவை அனைத்தும் காரணமாக இருக்கலாம்.

எனவே தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகள் வந்தால் கண்டிப்பாக இருவருக்கும் முறையாக கவுன்சிலிங் செய்ய வேண்டும். இது சரிப்படுத்தக்கூடிய விஷயம் என்று அவர்கள் இருவருக்கும் நம்பிக்கையை கொடுக்க வேண்டும். ஏனென்றால் பல நேரங்களில் அவர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 'தாம்பத்திய உறவு சரியாக இல்லையென்றால் கூட பரவாயில்லை டாக்டர், எங்களுக்கு குழந்தைபேறு மட்டும் உருவாக்கி கொடுங்கள்' என்று சொல்வார்கள்.

ஆனால் அவர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயம், இதை 100 சதவீதம் கண்டிப்பாக சரி செய்ய முடியும் என்பது தான். இதை எப்படி சரி செய்யலாம்? ஆண்களுக்கு முதலில் என்ன காரணத்தினால் விறைப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.

நாங்கள் எடுத்த ஆய்வின் படி விறைப்புத் தன்மை இல்லாமைக்கு, 22 முதல் 30 சதவீதம் நீரிழிவு தான் காரணமாக இருக்கும். அதுவும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. சிகிச்சைக்கு வரும்போதுதான் அவர்களுக்கே அது தெரியவரும். அவர்களுக்கு வயது 29 தான் இருக்கும். திருமணமாகி 3 முதல் 4 வருடம் ஆன நிலையிலேயே ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலே அவர்களின் விறைப்புத்தன்மை சரியாகும். அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

தாம்பத்திய உறவு பற்றி தவறான கருத்து:

மேலும் மன ரீதியான பிரச்சினைகளை பார்க்கையில், தாம்பத்திய உறவு கொள்ளும்போது அவர்களது செயல்முறையில் மன அழுத்தம் வரும். ஏனென்றால் ஆண்களை பொருத்தவரைக்கும் தாம்பத்திய உறவு என்பது ஒரு செயல் முறை. அதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களை பொருத்தவரை அது செயலற்ற முறை. அவர்களுக்கு ஆற்றல் தேவையில்லை. எனவே தன்னால் முடியுமா என்கிற எண்ணமே ஆண்களை நம்பிக்கை இழக்க செய்யும். அதுவே அவர்களுக்கு ஒரு பயத்தை கொடுக்கும். இதனால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத தம்பதிகள் பலர் உள்ளனர்.

இன்றைக்கும் பல ஆய்வுகளில் நாங்கள் பார்த்த விஷயம் என்னவென்றால், திருமணமானவுடன் முதலிரவில் தாம்பத்திய உறவு செய்ய வேண்டும், ஒரு வாரத்துக்குள் செய்து விட வேண்டும் என்கிற தவறான கருத்து உள்ளது. முதல் முறை தாம்பத்திய உறவு வைப்பது என்பது ஒரே நாளில் சாத்தியம் அல்ல. பலருக்கு இது ஒரு வாரம் ஆகலாம், சிலருக்கு ஒரு மாதம் கூட ஆகலாம். தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபடும்போதுதான் முழுமையாக செய்ய முடியும்.

ஆனால் இதைப்பற்றி தவறான எண்ணம் கொண்டு, முதலிரவில் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதால் மனநிலை பாதிப்பாகி, அதில் ஈடுபடாமல் நிறுத்துகிற தம்பதியினர் எண்ணிக்கையும் மிக மிக அதிகம். அவர்களை கேட்கும்போது இது தெரிய வரும். ஆமா டாக்டர், 'எனது நண்பர்கள் சொன்னார்கள், திருமணமான முதலிரவிலேயே தாம்பத்திய உறவு வைக்க வேண்டும் என்றார்கள். என்னால் முடியவில்லை. அதனால் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று நினைத்து நான் நிறுத்தி விட்டேன்' என்பார்கள்.

பெண்களை பொருத்தவரைக்கும் இது ஒரு வலி நிறைந்த விஷயம், எனவே தாம்பத்திய உறவே வேண்டாம், நாங்கள் நண்பர்களாக இருந்து கொள்கிறோம் என்று சொல்வார்கள். இந்த மாதிரியான தவறான கணிப்புகள், புரிதல் இல்லாத விஷயங்கள் அவர்களிடம் இருக்கும்.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

100 சதவீதம் முழுமையாக சரி செய்ய முடியும்:

எனவே இதுபோன்ற தம்பதிகளை முறையாக பரிசோதித்து, முறையான கவுன்சிலிங் கொடுத்து அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். தற்காலத்தில் இருக்கிற சில மாத்திரைகள் மருத்துவ ரீதியாக விறைப்புத்தன்மை செயலிழப்பை 100 சதவீதம் முழுமையாக சரி செய்யும். உயிரணுக்கள் முன்கூட்டியே வெளியாவதையும் தடுக்கும். அதன் மூலம் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும். எனவே முறையான நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற்றால், அவர் அதை சரிசெய்து விடுவார்.

 

பெண்களை பொருத்தவரை 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வஜினிஸ்மஸ் (பெண்ணுறுப்பில் ஏற்படும் இறுக்கம்) என்பது தாம்பத்திய உறவு இல்லாமைக்கு அடிப்படை காரணமாக உள்ளது. அதற்கு பய உணர்வு தான் முக்கிய காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட பெண்களுக்கு முறையாக பரிசோதித்து முறையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இன்றும் வஜினிஸ்மஸ் பிரச்சினை வருவதற்கு இயற்கையிலேயே உள்ள பய உணர்வு மற்றும் சிறு வயதில் ஏற்படுகிற பாலியல் வன்கொடுமை ஆகியவை தான் காரணமாகும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அவர்களின் பிரச்சினைகளை சரிசெய்ய சில தெரபிகள் இருக்கிறது. அவர்கள் அதற்கான சரியான சிகிச்சையை பெற வேண்டும். அவர்களை முறையாக பரிசோதித்து, முறையாக கவுன்சிலிங் செய்து, சரியான சிகிச்சை அளிக்கும்போது, அவர்களுக்கான பாதிப்புகள் முழுமையாக சீராகி கண்டிப்பாக தாம்பத்திய உறவு கொள்ள முடியும். எனவே முறையான சிகிச்சை பெற்றால், 100 சதவீதம் தாம்பத்திய உறவு இல்லாமையை சரி செய்ய முடியும். இதன் மூலமாக அந்த தம்பதிகள், ஆய்வகத்தில் கருத்தரிக்காமல், தாம்பத்திய உறவின் மூலம் வீட்டிலேயே இயற்கையாக கருத்தரித்து குழந்தை பேறு பெற முடியும்.

Tags:    

Similar News