- முருகப் பெருமானின் பெருமையைப் புகழ்ந்து பாடுவதில் கந்தர்கலிவெண்பா சிறந்து விளங்குகிறது.
- 111 முதல் 122 வரை பாடல்களில் முருகப்பெருமானிடம் வேண்டுகோள்கள் இடம்பெறுகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி மடம் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். தமிழகத்தில் இருந்து சென்ற மாபெரும் மகான் குமரகுருபரர் உருவாக்கிய மடம் அது. சைவத்துக்கும், தமிழ் மொழிக்கும் நிகரற்ற தொண்டாற்றிய குமரகுருபரர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
அவரது அந்த அற்புதங்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருந்தது திருச்செந்தூர் முருகனின் அருளாசியாகும். குமரகுருபரரின் வாழ்வில் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் நடத்திய திருவிளையாடல் இன்றும் போற்றி புகழப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் எத்தனையோ பேர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்.
உலகம் போற்றும் ஞானியர்கள் பலர் திருச்செந்தூர் புண்ணிய பூமியில் நடமாடி அருள் பெற்றுள்ளனர். அவர்களில் சைவ சமயம் நாடு முழுவதும் தழைக்குமாறு காசி வரை சென்று மடாலயங்கள் நிறுவியவரும், சிங்கத்தின் மீது ஏறி முகலாய மன்னரைப் பிரமிக்க வைத்தவரும், பிள்ளைத் தமிழ் பாடி மதுரை மீனாட்சி அம்மனை மனம் குளிர வைத்தவருமான குமரகுருபர சுவாமிகளுக்கு திருச்செந்தூரிலே முருகப் பெருமான் அருளிய நிகழ்ச்சி அடியார்களுக்கு பக்திப் பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும்.
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர், திருச்செந்தூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் பகுதி அந்த கால கட்டத்தில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் மிகச்சிறந்து விளங்கியது. அங்கு சைவ சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சண்முக சிகாமணிக் கவிராயர் என்பவர் தனது மனைவி சிவகாம சுந்தரியுடன் வாழ்ந்து வந்தார். திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.
குழந்தை பேறுக்காக அவர்கள் தங்களது குலதெய்வமான திருச்செந்தூர் முருகனை வேண்டி வணங்கி விரதம் இருந்து வழிபட்டனர். அதன் பயனாக 1615-ம் ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் ஆண் குழந்தையைப் பெற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்கவில்லை.
ஏனெனில் குழந்தை பிறந்து 5 வயதாகியும் அது வாய் பேசாமல் மவுனமாக இருந்தது. தங்கள் அருமைக் குழந்தையின் மழலை மொழியைக் கேட்டு இன்புற முடியவில்லையே என்று அவர்கள் மிகவும் ஏங்கினார்கள். இதற்கிடையில் கவிராயர் தம்பதிகளுக்கு மேலும் ஒரு குழந்தை பிறந்தது. முதல் குழந்தை 5 வயதாகியும் பேசாத நிலையில் இரண்டாவது குழந்தை இரண்டு ஆண்டுகளிலேயே கணீர், கணீரென பேசத் தொடங்கியது. இதனால் ஐந்து வயது நிரம்பிய மூத்த குழந்தைக்குப் பேச்சு வரவில்லையே என்று கவிராயரும் அவரது மனைவியும் தவியாய்த் தவித்தனர்.
தங்கள் தவிப்பு நீங்க, அவர்கள் அந்த மவுனக் குழந்தையை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் வளாகத்தில் தங்கி பக்தியுடனும் சிரத்தையுடனும் நாற்பது நாட்கள் கடும் விரதம் இருந்தனர். நாட்கள் உருண்டோடின. நாற்பது நாட்களாகியும் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. இதனால் அந்த தம்பதிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
"முருகா! விடியும் முன் எங்கள் குழந்தைக்குப் பேச்சு வராவிட்டால் திருச்செந்தூர் கடலில் விழுந்து மூழ்கி எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம். அதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை" என்று கதறினார்கள். மறுநாள் காலை கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு அவர்கள் வந்து இருந்தனர்.
ஆனால் அவர்களது குழந்தைக்கு தூக்கம் வரவில்லை. அவன் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வெளிப் பகுதியில் கடலோரத்தில் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே திடீரென கண்ணை கூசச்செய்யும் அளவுக்கு மிகப்பெரிய பேரொளி தோன்றியது. அந்த ஒளியில் இருந்து முருகன் அருட்காட்சி கொடுத்தார். கண்களில் கண்ணீர் சொரிய, வாய் பேசமுடியாத அக்குழந்தை, ஜோதிக்கெல்லாம் ஜோதியான பேரொளியைக் கண்டு தன் இருகரம் கூப்பித் தொழுதது.
புன்னகையுடன் காட்சி அளித்த முருகப் பெருமான் குழந்தையை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். அதுவரை பேசாமல் மவுனமாக, ஊமையாக இருந்த குழந்தை 'அடியேன்' என்று சொல்லி முருகனைத் தொழுது வணங்கியது. முருகப் பெருமானின் காலடி பணிந்து எழுந்தது. முருகப் பெருமான் குழந்தையை 'குருபரா' என்று அன்போடு அழைத்து, நாவில் "சரவண பவ" எனும் சடாட்சர மந்திரம் எழுதி ஆசிர்வதித்தார்.
முருகப் பெருமானின் அருட்காட்சியும் ஆசியும் கிடைத்த அந்த நிமிடம் முதல் அந்த சிறுவனிடம் மாற்றம் ஏற்பட்டது. அவனுக்குள் புதிய ஞானஒளி பிறந்தது. அதோடு மவுனம் விலகி பேச்சும் வந்தது. அதன் காரணமாக உலக ஞானம் அனைத்தும் கற்காமலேயே அந்த சிறுவனுக்கு தோன்றியது.
திருச்செந்தூர் முருகன் பூ ஒன்றினை காட்டி சிறுவனைப் பார்த்து சைவம் தழைக்க பாடுக என்று கூறி மறைந்தார். இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பேசாமல் இருந்த சிறுவன் பேசத் தொடங்கினான். முருகா.... முருகா... என்று அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
பொழுது விடிந்தது. தங்கள் குழந்தைக்கு பேச்சு வந்து விட்டதை கண்டு கவிராயர் தம்பதியினர் மிகவும் மகிழ்ந்தனர். முருகப் பெருமானின் திருவருளை எண்ணி வியந்தனர். குருவருள் பெற்ற குமரனை, 'குமரகுருபரன்' என்று புதிய பெயரிட்டு அழைத்தனர்.
அப்போது மீண்டும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.
அதுவரை பேச்சு வராத சிறுவனாக இருந்த குமரகுருபரர் திடீரென்று பாடத் துவங்கினார். "பூமேவும் செங்கமல..." என்பது அந்த பாடலின் முதல் வரியாக அமைந்தது. சிறிது நேரத்தில் பாடல் முழுவதையும் பாடி முடித்தார். அந்த பாடல்களின் தொகுப்பே 'கந்தர் கலிவெண்பா' ஆயிற்று.
முருகப் பெருமானின் பெருமையைப் புகழ்ந்து பாடுவதில் கந்தர்கலிவெண்பா சிறந்து விளங்குகிறது. திருச்செந்தூரில் எழுந்தருளி இருக்கும் கந்தக்கடவுளைக் கலிவெண்பாவால் பாடியதால் 'திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா' எனப் பெயர் பெற்றது.
சுந்தர் கலிவெண்பாவினுள், குமரகுருபரர் சைவச் செந்நெறிக் கொள்கைகளைத் தொகுத்து கூறி இருப்பது போலப் பிறர் எவரும் சொல்லவில்லை எனப் பேரறிஞர்கள் கூறியுள்ளனர். இது ஒரு தோத்திர நூல்,
122 பாடல்களை உடையது. தொடக்கத்தில் 36 பாடல்களில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. பரம்பொருளும், முருகப்பெருமானும் வேறில்லை என்பதை உணர்த்தும் வகையில் கூறப்படுகிறது.
37 முதல் 58 வரையுள்ள பாடல்களில் முருகப்பெருமானின் திருவடிவம் எழில்பெற எடுத்துரைக்கப்படுகிறது. திருமுடி தொடங்கித் திருவடி வரையில் வருணிக்கப்படுகிறது. ஆறு திருமுகங்கள், பன்னிரு கரங்கள் முதலியன வற்றின் அருள் செயல்கள் இங்குப் பாராட்டப்படுகின்றன.
59 முதல் 65 வரையுள்ள பாடல்களில் இறைவன் அண்ட சராசரத் தொகுதி முழுவதிலும் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அருள்வளக்காட்சி இடம் பெறுகிறது.
66 முதல் 74 வரையுள்ள பாடல்களில் இறை வனது பத்துவகை (தசாங்கம்) அரசு உறுப்புகள் கூறப்படுகின்றன. இது திருத்தசாங்கம் எனப்படும்.
75 முதல் 110 வரை உள்ள பாடல்களில் கந்தபுராண வரலாற்றுச் செய்திகள் சுருக்கிச் சொல்லப்படுகின்றன.
111 முதல் 122 வரை பாடல்களில் முருகப்பெருமானிடம் வேண்டுகோள்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு, இச்சிறிய நூலில் இறை இயல்பும், முருகனின் பெருவடிவும், திருத்தசாங்கமும். கந்தபுராணச் சுருக்கமும். வேண்டுகோளும் முறையே அமைந்து விளங்குகின்றன.
111 முதல் 122 வரை உள்ள பாடல்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ஆறு திருத்தலங்களையும் தரிசித்துச் சடட்சரத்தை அன்போடு சொல்லுபவர்களுடைய உள்ளத்தில் குடி கொண்டு வாழ்பவனே! திருச்சீரலைவாய் என்னும் செந்தில் பதியைக் காக்கும் செவ்வேளே! கோடிக்கணக்காக வரும் பிறவிப்பகையும் அகால மரணமும், பல கோடி இடையூறுகளும், பலவான நோய்களும், பல கோடியான பாவச்செயல்களும், சூனியமும், பாம்பும் வலிமையுடைய பூதமும், தீயும் நீரும், போர்செய்யும் படையும், தீமை நீங்காத கொடிய விஷமும், துஷ்டமிருகம் முதலிய எவையும் எவ்விடத்திலாயினும் எம்மை வந்து எதிர்க்குமாயின் அவ்விடத்தில் மயில் வாகனமும், பன்னிரண்டு திருத்தோள்களும் கூரிய வேலாயுதமும், சுச்சை அணிந்த அழகிய இடுப்பும், சிறிய திருவடிகளும், சிவந்த அழகிய கரங்களும், பன்னிரண்டு கருணைபொழியும் கண்களும், ஆறு திருமுகங்களும்,
எதிரில் தோன்றும் படியாக எழுந்தருளி, நேரும் இடர்களையெல்லாம் தூளாக்கி, எவ்வரம் கேட்பினும் அவ்வரத்தைத் தந்து, மகிழ்ச்சியோடு என் உள்ளத்தில் புகுந்திருந்து, பலவகைப்பட்ட காவியங்களின் தொகுதியும், தமிழ்ப்புலமையும் தந்தருளி, நல்லொழுக்கத்தையும் உதவி, இப்பிறப்பில் உண்டாகின்ற அகப்பற்று, புறப்பற்று ஆகிய இரண்டினையும் நீக்கி, மும்மலத் தொடர்புகளையும் அகற்றுவித்து, அடியாருடன் கூட்டுவித்து, அவர்கள் அனுபவிக்கும் பேரின்பத்தை அடியேனும் அனுபவிக்கச் செய்து, திருவடித் தொண்டானாக ஆட்கொண்டருளி அடியனாகிய எனக்கு ஆண்டவனாகிய நீ முன்னின்று திரு அருள்புரிவாயாக.
இவ்வாறு கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் முருகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை பாட, பாட புண்ணியம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
முருகனின் திருவருளால் அனைத்தையும் கற்காமலேயே உணர்ந்த குமரகுருபரர் தன் ஊரில் எழுந்தருளியிருக்கும் கைலாசநாதர் மீது 'கயிலைக் கலம்பகம்' என்ற நூலைப் பாடியருளினார். தூய தவநெறி வாழ்வை மேற்கொள்ள விரும்பிய அவர், தமிழகம் முழுவதும் கோவில், கோவிலாக புனித யாத்திரை செல்ல தீர்மானித்தார். இதற்காக பெற்றோரின் அனுமதி பெற்று திருத்தலந்தோறும் சென்று இறைவனைத் தொழுதார்.
ஒரு சமயம் திருச்செந்தூர் சென்றபோது, தனக்கு வழிகாட்ட கூடிய குருவைக் காட்டி அருளுமாறு முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டார். 'உனது குருவை நீ காணும்போது அவரது கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலை ஏற்பட்டு நீ மவுனமாகி அவரையே உனது குருவாகக் கொள்வாய்' என்னும் முருகனின் அருள்வாக்கு அவருக்குக் கிடைத்தது.
திருச்செந்தூர் முருகன் உத்தரவுப்படி குமர குருபரர் விரைவிலேயே தன் குருவை கண்டு பிடித்தார். அந்த அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.