சிறப்புக் கட்டுரைகள்

விதியை வெல்ல முடியுமா?

Published On 2025-03-15 15:02 IST   |   Update On 2025-03-15 15:02:00 IST
  • தினமும் புதிது புதிதாக மாடும் கன்றுக்குட்டியும் வந்து கொண்டே இருந்தன.
  • வீட்டை விற்று வந்த பத்தாயிரம் ரூபாயை உண்டியலில் போட்டார்.

நாரதர் தனது பக்தருக்கு உதவுமாறு இந்திரனிடம் வேண்டினார்.

இந்திரனும், "ஒரு பசுமாட்டையும் கன்றுக் குட்டியையும் வைத்துதான் அவன் பிழைப்பு நடத்தியாக வேண்டும். உமக்காகக் கூட உமது பக்தனுக்கு அவனுடைய விதியை மீறி எதனையும் செய்து கொடுக்க முடியாது!" என்று கூறிவிட்டார்.

இந்திரனை அதற்கு மேலும் வற்புறுத்தாமல் நாரதரும் அமைதியாகி விட்டார்.

அவர் தனது பக்தனிடம் வந்து, "உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?" என்று கேட்டார்.

"நாள் ஒன்றுக்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும். அதில் மாட்டை பராமரிப்பதில் முந்நூறு ரூபாய் செலவாகிவிடும். மீதமுள்ள இருநூறு ரூபாயைக் கொண்டுதான் வீட்டுச் செலவுகள் அத்தனையையும் பார்க்க வேண்டும்" என்று அந்த பக்தர் கூறினார்.

நாரதர் கேட்டார்: "இந்த மாட்டை விற்றால் எவ்வளவு கிடைக்கும்?"

"மிகச் சுலபமாக பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும்."

"ஐநூறு பெரிதா, பத்தாயிரம் பெரிதா? மாட்டை ஓட்டிக்கொண்டு வா! பத்தாயிரத்துக்கு விற்று விடலாம்!" எனக் கூறியவாறே நாரதர் புறப்பட்டார்.

வேறு வழி தெரியாத பக்தரும் மாட்டை ஓட்டிச் சென்றார்.

மாட்டை விற்றதில் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது.

"ஐநூறு ரூபாய் கிடைத்தால் சிக்கனமாக தான் செலவழித்தாக வேண்டும். இப்போது உனக்கு பத்தாயிரம் கிடைத்துள்ளது. உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடு! எல்லோருக்கும் தாராளமாக விருந்து வைக்கலாம்!" என்று நாரதர் கூறினார்.

தடபுடலாக விருந்து நடைபெற்றது. ரூபாய் பத்தாயிரமும் காலி.

நாளைய செலவை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையில் அந்த பக்தருக்கு இரவுத் தூக்கம் வரவில்லை.

அதிகாலையில் எழுந்து பார்த்தால், மாட்டுத் தொழுவத்தில் புதியதாக ஒரு மாடும் கன்றுக்குட்டியும் நின்று கொண்டிருந்தன.

பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன் யோசித்துக் கொண்டிருக்கிறாய் ? இன்றைய செலவுக்கு இவை போதும். மாட்டையும் கன்றுக்குட்டியையும் என் பின்னால் ஓட்டிக் கொண்டு வா!" என்று நாரதர் கூறவும் இருவரும் அந்த மாட்டை விற்று பணத்தைக் கொண்டு வந்தார்கள்.

அன்றும் தடபுடலான விருந்து நடைபெற்றது.

இதே கதை ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்றது.

தினமும் புதிது புதிதாக மாடும் கன்றுக்குட்டியும் வந்து கொண்டே இருந்தன. இவர்களும் அவற்றை விற்று விட்டு தடபுடலான விருந்துகளையும் நடத்தி வந்தனர்.

எட்டாவது நாள் நாரதரைத் தேடி இந்திரன் ஓடிவந்து விட்டார்.

"உமது பக்தனுடைய தலைவிதிப்படி அவன் ஒரு மாட்டையும் கன்றுக்குட்டியையும் வைத்து பிழைப்பை நடத்தியாக வேண்டியதுள்ளது.

ஒவ்வொரு நாளும் அவற்றை நீங்கள் இருவரும் விற்று விடுவதால், நான் தினமும் புதிது புதிதாக மாட்டையும் கன்றுக்குட்டியையும் கொண்டு வந்து கட்டவேண்டியதுள்ளது. உமது பக்தனுக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். என்னை விட்டு விடுங்கள்!" என்று நாரதரிடம் மன்றாடினார்.

இதுதான் விதியை வெல்லக் கூடிய அணுகு முறையா?

இது போல் இன்னும் ஒரு சம்பவம்.

இதுவும் அந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதை.

அவர் ஒரு பெரிய வியாபாரி. அவருக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தன.

வியாபாரம் சம்பந்தமாக அவர் ஒரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்து.

துரதிர்ஷ்டவசமாக அந்தக் கப்பல் ஒரு பெரிய புயலில் மாட்டிக் கொண்டது.

கப்பலைக் காப்பாற்ற, கப்பல் தலைவர் கடுமையாகப் போராடினார். அவரால் கட்டுப்படுத்த முடியாமல் கப்பல் தடுமாறியது.

கடைசியில் அவர் தனது இயலாமையை அறிவித்தார்: "கப்பலைக் காப்பாற்ற என்னால் முடிந்த வரைக்கும் போராடி விட்டேன். என்னால் வெற்றி பெற இயலவில்லை. எந்த நிமிடத்திலும் கப்பல் கவிழ்ந்து விடலாம். நீங்கள் அனைவரும் உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்!"

அந்த வியாபாரியும் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி பிரார்த்தனை செய்தார்.

"இறைவா! என்னை இந்த புயலில் இருந்து காப்பாற்றி விடு. நகரத்திலுள்ள வீடுகளில் ஒன்றை விற்று பணத்தை உண்டியலில் போட்டு விடுகிறேன்" என்று அவர் கோரிக்கை வைத்தார்.

அவர் மரணமடைந்தால் எந்தவொரு சொத்துமே அவருக்குக் கிடைக்காமல் போய்விடும். பிரார்த்தனையின் படி அவர் காப்பாற்றப்பட்டால், ஒரேயொரு வீட்டை மட்டுமேதான் இழக்க வேண்டியது வரும்.

அதனால் அவர் அப்படி பிரார்த்தனை செய்தார்.

ஆனால் என்ன ஆச்சரியம், அவர் பிரார்த்தனை செய்த ஐந்து நிமிடங்களில், கொடூரமாகத் தாக்கிய அந்தப் புயல், சுத்தமாக நின்று போய் விட்டது.

இப்போது அந்த வியாபாரிக்கு ஒரே வருத்தம்.

"அடடா! அவசரப்பட்டு விட்டோமே! பிரார்த்தனை செய்யாமலிருந்தால் கூட இந்தப் புயல் தானாகவே நின்றிருந்திருக்கும். அவசரப்பட்டு ஒரு கோடி ரூபாய் வீட்டை இழந்து விட்டோமே!" - இப்படி சிந்தித்த அவர் நிம்மதி இல்லாமல் தவித்தார்.

அவரிடமிருந்த ஒவ்வொரு வீடும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறும்.

அவர் கப்பலில் இருந்து கரையிறங்கும் முன்பு ஒரு வழியாக சுதாரித்துக் கொண்டார்.

அவர் கரைக்கு வந்ததும் அவருடைய ஒரு வீட்டை மட்டும் விலை பேச ஆரம்பித்தார்.

அந்த வீட்டை வாங்குபவர்கள் மீது மட்டும் ஒரு நிபந்தனையை விதித்தார்.

"இந்த வீட்டை வாங்குபவர்கள் இந்த வீட்டோடு சேர்த்து, நான் வளர்த்து வரும் நாய்க்குட்டியையும் வாங்க வேண்டும்...

"நாய்க்குட்டியின் விலை ஒரு கோடி ரூபாய். ஆனால் வீட்டின் விலை வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டும் தான்!"

ஒருவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்து நாய்க்குட்டியையும், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வீட்டையும் வாங்கிக் கொண்டார்.

இப்போது அந்த வியாபாரி, உண்டியலில் எவ்வளவு பணம் போடவேண்டும்?

வீட்டை விற்று வந்த பத்தாயிரம் ரூபாயை உண்டியலில் போட்டார். நாய்க்குட்டியை விற்று வந்த ஒரு கோடி ரூபாயை தனக்கு எடுத்துக் கொண்டார்.

விதியை எப்படி வென்றுவிட்டார் பார்த்தீர்களா?

இப்படிதான் விதியை வெல்ல வேண்டுமா?

ஓர் உதாரணம்.

நீங்கள் ஒரு நீதிபதி. கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நான் உங்கள் முன்னால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறேன்.

நான் பொருளாதார வசதி மிகுந்தவன்; அரசியல் செல்வாக்கு நிறைந்தவன்.

நான் உங்களிடம் பேரம் பேசுகிறேன்.

"சாட்சியங்கள் யாவும் நம்பும்படியாகவே உள்ளன. தீர்ப்பு உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் நினைத்தால் தண்டிக்கவும் செய்யலாம்; விடுதலையும் செய்யலாம்...

"என்னை நீங்கள் விடுதலை செய்வீர்களேயானால், எனது சொத்துகளில் பாதியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொடுத்து விடுகிறேன். உங்களுக்கு உயர் பதவியையும் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்." - இப்படி நான் கூறவும்,

நீங்களும் அதனை ஏற்றுக்கொண்டு, "நான் உன்னை விடுதலை செய்து விடுகிறேன். நீயும் நீ வாக்கு கொடுத்தபடி நடந்துகொள்!" என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம்.

இந்த அணுகுமுறை சரியானதாக இருக்க முடியுமா? - நியாயமானதாக இருக்க முடியுமா?

பாவ கர்மாவை செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், பரிகார பூஜைகள் எல்லாம் செய்வதற்கும், நீதிபதியிடம் பேரம் பேசுவதற்கும் வித்தியாசம் ஏதாவது உண்டா?

கர்ம வினை என்றால் என்ன?

பாவ கர்மா, புண்ணிய கர்மா என்றால் என்ன?

புண்ணிய கர்மாக்கள் செய்தால் வெகுமதிகள் கிடைக்குமா?

பாவ கர்மாக்கள் செய்தால் தண்டனை கிடைக்குமா?

நமக்கு நாமே செய்து கொள்ளும் செயல்கள் ஒரு போதும் கர்மாவாக கணக்கிடப்படுவதில்லை. அடுத்தவர்களுக்கு நல்லது செய்கிறோமா அல்லது கேடு விளைவிக்கிறோமா என்பதைப் பொருத்துதான் நற்கர்மா அல்லது மோசமான கர்மா ஏற்படுகிறது.

நற்செயல் என்பது எது?

அதற்கு மாறான செயல் என்பது எது?

இதற்கு ஏசுநாதர் சுலபமான ஒரு சூத்திரத்தைக் கூறி விட்டார்.

அதென்ன சூத்திரம்?

பிறர் உனக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அவற்றை நீ அவர்களுக்கு செய்.

அது போல் என்னவெல்லாம் பிறர் உனக்கு செய்யக்கூடாது என்று விரும்புகின்றாயோ அவற்றை நீ அவர்களுக்குச் செய்யாதே.

நல்லது எது தவறானது எது என்பது நம் அனைவருக்கும் நம்மை அறியாமலேயே தெரிந்து விடும்.

நாம் செய்யும் தவறான செயல்கள் அனைத்தும் நமது கணக்கில் பாவ கர்மாவாக இணைந்து விடுகின்றன.

அது போல் நாம் செய்யும் நற்செயல்கள் யாவும் நமது கணக்கில் புண்ணிய கர்மாக்களாக இணைந்து விடுகின்றன.

பாவ கணக்குக்கு தண்டனை கொடுக்கப்படுமா?

பாவத்தின் காரணமாக கஷ்டங்கள் நிச்சயம் ஏற்படும். ஆனால் அவை எவையும் தண்டனையாக இருக்காது. ஏன் அப்படி?

நீங்கள் ஒரு பத்திரிகைக்காக சிறையில் உள்ள கைதிகளை பேட்டி எடுப்பதாக வைத்துக் கொள்வோம்.

"உன்னை ஏன் ஜெயிலில் அடைத்தனர்?"

என்று ஒரு கைதியிடம் கேட்கிறோம்.

 

ஸ்ரீ பகவத்

"ஒரு பெண்ணிடம் நகையைத் திருடும்போது மாட்டிக் கொண்டேன். எனக்கு தண்டனை கொடுத்து சிறையில் போட்டு விட்டார்கள்" என்று அவனும் கூறுகிறான்.

நாமும் ஒரு பேச்சுக்காக, "நகையைத் திருடியதற்காக உன்னை ஏன் ஜெயிலில் போடவேண்டும்?" என்று கேட்கிறோம்.

அதற்கு அவனும், "நகையைத் திருடியதற்காக விருந்தா வைப்பார்கள்? ஜெயிலில் தான் போடுவார்கள்" என்று கூறுகிறான்.

"அப்படி ஜெயிலில் போடவேண்டிய நோக்கம் என்ன?" என்று அவனிடமே கேட்கிறோம்.

"இத்தகைய குற்றங்களை நான் திரும்பவும் செய்யக்கூடாது என்பதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்துள்ளார்கள்" என்று அவனும் கூறி விடுவான்.

இவ்வாறுதான் நமது பாவகர்மாக்களுக்கு தண்டனையாக கஷ்டங்கள் நமக்குக் கொடுக்கப்படுகின்றனவா?

என்ன தவறு செய்ததற்காக இந்த தண்டனை - கஷ்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது எவருக்காவது தெரியுமா?

அது எவருக்குமே தெரியாது.

முற்பிறவியில் செய்த தவறு என்ன?

இந்த பிறவியில் நாம் என்ன தவறை மீண்டும் செய்யக்கூடாது? - இந்த விபரங்கள் நம் எவருக்குமே தெரியாது.

ஆகவே கர்மாவின் காரணமாக நாம் அனுபவிக்கக் கூடிய எந்த ஒரு கஷ்டமும், தண்டனையாக நமக்கு கொடுக்கப்படவில்லை.

கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அந்த கஷ்டங்களுக்குக் காரணம் நமது கர்மாவாக இருந்த போதிலும், அவை தண்டனையாக வழங்கப்படாமல், நமக்கு வழிகாட்டும் அம்சமாகவே நமக்கு வழங்கப்படுகின்றன.

இன்பங்கள் அனைத்தும் நம்மை முடக்கிப் போட்டு விடும்.

துன்பங்கள் மட்டுமே உந்துசக்தியாக இருந்து நமக்கு வழியைக் காட்டும்.

நம்மை வழிநடத்தும் இறை அம்சமே நமக்கு இத்தகைய துன்பங்களைக் கொடுத்து நம்மை வழிநடத்துகின்றது.

நம்முடைய கர்மாவை மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு உண்டா?

அதனையும் பார்த்திடுவோம்...

தொடர்புக்கு,

வாட்ஸப் - 8608680532

Tags:    

Similar News