சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் வளர்த்த அறிஞர்கள் - வ.உ.சிதம்பரம் பிள்ளை

Published On 2025-03-14 08:05 IST   |   Update On 2025-03-14 08:05:00 IST
  • ஓலைச் சுவடிகளிலேயே நெடுங்காலமாக உறங்கிக் கொண்டிருந்த சில நூல்கள் வ.உ.சி.யால் தான் அச்சேறிக் காகிதங்களுக்கு வந்து சேர்ந்தன.
  • ஜேம்ஸ் ஆலனின் மூன்று நூல்களை முழுமையாக மொழிபெயர்த்துள்ளார்.

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராய் அறியப்பட்டிருக்கும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மிகச் சிறந்த தமிழ் அறிஞரும் கூட. அவர் பழந்தமிழ் நூல்கள் பலவற்றிற்கு உரை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

திருக்குறளின் புகழ்பெற்ற உரையாசிரியர்கள் வரிசையில் வ.உ.சி.க்கும் ஒரு நிரந்தர இடம் உண்டு.

மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் என்ற மெய்ப்பொருள் நூலுக்கு முதன்முதலாக உரை எழுதியவர் சிவஞான முனிவர். வ.உ.சி., தாமும் அதற்கு ஓர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே சிவஞான போதத்திற்கு இருந்த உரை கடின நடையில் இருந்ததால் மக்கள் அஞ்சி அதைப் பயிலாது விட்டுவிடுவர் எனக் கருதிய வ.உ.சி., அதன் காரணமாகவே அந்நூலுக்குத் தாம் எளிய உரை எழுத முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார். பழைய உரையில் இருந்து தம் உரை எப்படி வேறு பட்டதென அவர் விளக்கும் இடம் இதோ...

`மத வேற்றுமையைக் காண்பவர்களும் பேசுபவர்களும் யான் எனது என்னும் மதவெறி பிடித்த மக்களே என்றும், நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலைமையில் மதவேற்றுமைகளையோ சாதி வேற்றுமைகளையோ வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும் பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களே என்றும் யான் கருதுகிறேன். அதனாலும் இவ்வுரையில் யான் பல மதக் கோட்பாடுகளையும் அவற்றின் பொய்யான உயர்வு தாழ்வுகளையும் பற்றி ஒன்றும் பேசவில்லை!`

ஜாதி மத வேறுபாடுகளைப் புறந்தள்ளிய ஒற்றுமைமிகு பாரதம் உருவாக வேண்டும் என்பதே வ.உ.சி.யின் கனவு என்பதை இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது.

வ.உ.சி.யின் இலக்கியப் பணிகளைப் பற்றிச் சொல்லும்போது கட்டாயம் அவரது பதிப்புப் பணிகள் பற்றியும் சொல்லவேண்டும். அண்மைக்காலத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. உள்ளிட்ட பலர் தமிழ்ப் பதிப்புப் பணிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர். அத்தகைய மேலான வரிசையில் இடம்பெற வேண்டிய இன்னொரு முக்கியமான பெயர் வ.உ.சி. என்பது.

ஓலைச் சுவடிகளிலேயே நெடுங்காலமாக உறங்கிக் கொண்டிருந்த சில நூல்கள் வ.உ.சி.யால் தான் அச்சேறிக் காகிதங்களுக்கு வந்து சேர்ந்தன. திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய அறத்துப் பாலுக்கான உரையை முதலில் பதிப்பித்தவர் வ.உ.சி. தான்.

அருஞ்சொற்பொருள் தருதல். தேவைப்படும் இடங்களில் விளக்கம் தருதல், ஆங்காங்கே தெளிவின் பொருட்டு இலக்கணக் குறிப்பு வழங்குதல் எனப் பல வகைகளில் தம் பதிப்புப் பணியை மேன்மைப்படுத்தியிருக்கிறார் வ.உ.சி. அவர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று.

கட்டுரைகள் மூலம் அவர் செய்த இலக்கியப் பணி அளப்பரியது. சிற்பம் செதுக்கியதுபோல் சிறந்த கட்டுரைகளை எழுத்தில் வடிப்பதென்பது ஒரு தனிச் செய்நேர்த்தி. அந்தச் செய்நேர்த்தி தமிழில் அறிஞர் வ.ரா.வுக்கு மிகச் சிறப்பாகக் கைவந்திருந்தது. அச்செய்நேர்த்தி கைவரப் பெற்றிருந்த மேலும் சிலரில் வ.உ.சி. பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வ.உ.சி. எழுதிய முதல் கட்டுரை விவேகபானு என்னும் ஆன்மிக இதழில் வெளிவந்துள்ளது. வ.உ.சி. ஆன்மிக நம்பிக்கை கொண்டவராகவே இறுதிவரை வாழ்ந்தவர். அவர் எழுதிய கட்டுரைகளில் அதிகம் இடம் பிடித்தது ஆன்மிகமே.

அவர் எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பு `கடவுளும் பக்தியும்` என்பது. `கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், வினையும் விதியும்` போன்ற அவரது ஆன்மிகக் கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டுபவை.

அரசியல், இலக்கியம் உள்ளிட்ட தனக்கு ஆர்வமுள்ள எல்லாத் துறைகள் குறித்தும் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார். தேசிய ஒருமைப்பாடு அவரது பல அரசியல் கட்டுரைகளில் அடிநாதமாய்க் காணப்படுகிறது. திலகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். தாம் குருவாகப் போற்றிய திலகர் வாழ்வைப் பற்றித் தாம் எழுத வேண்டியதைத் தம் கடமையாகக் கருதினார் அவர். `திலகர் என் அரசியல் குரு ஆவார். எனது 21-வது வயதில் இருந்து அரசியலைப் பற்றிய அவருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கவனித்து வந்தேன். இந்தியா எனது நாடு, அன்னியமான நாட்டை அவர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று அவை எனக்கு உணர்த்தின.`

எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவிக்கிறார் வ.உ.சி...

திலகரின் மறைவுக்குப் பின் அவரது நண்பர்களால் `திலகர் நினைவுகள்` என்றொரு தொகுதி கொண்டுவரப்பட்டது. அதிலும் ஒரு கட்டுரையில் தம் நினைவலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

`பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் வாழ்க்கை வரலாறு` என்னும் தலைப்பில் இலங்கையில் இருந்து வெளிவந்த வீரகேசரி பத்திரிகையில் அவர் தொடர் எழுதினார் என்பது ஆய்வாளர் மா.ரா. அரசு தரும் செய்தி. ஆனால் அவ்வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி.

வ.உ.சி.யின் இலக்கியப் பணிகளில் அவரது மொழிபெயர்ப்புப் பணியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்குப் பெரிய அளவில் வளம் சேர்த்தது அவரது மொழிபெயர்ப்புப் பணி. மேலை நாட்டுத் தத்துவ அறிஞர்களுள் வ.உ.சி.யின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் ஜேம்ஸ் ஆலன். ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளில் தம்மைப் பறிகொடுத்த வ.உ.சி. `ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் பலவற்றைப் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது` என்றே குறிப்பிடுகிறார்.

ஆங்கில மொழி மூலம் தாம் பெற்ற பாக்கியத்தை மற்றவர்களின் பாக்கியமாகவும் மாற்ற எண்ணிய அவர், அந்தத் தத்துவச் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலானார்.

அரசியல் பணிகளால் வ.உ.சி.க்கு ஜேம்ஸ் ஆலன் எழுத்துக்களை மொழிபெயர்க்க நேரம் கிட்டாமல் இருந்தது. பிரிட்டிஷாரால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட து அந்நிலைமையே அவருக்கு வாய்ப்பாயிற்று. சிறைக் காலத்தை ஜேம்ஸ் ஆலன் நூல்களை மொழிபெயர்க்கக் கிடைத்த கால அவகாசமாக அவர் கருதினார்.

 

திருப்பூர் கிருஷ்ணன்

ஜேம்ஸ் ஆலனின் மூன்று நூல்களை முழுமையாக மொழிபெயர்த்துள்ளார். `மனம்போல வாழ்வு, அகமே புறம், மெய்யறிவு` முதலிய நூல்களை இன்றைய இளைஞர்கள் அவசியம் பயிலவேண்டும். மனத்தை அடக்குவது எப்படி, வாழ்க்கையை வெல்வது எப்படி என்பன போன்ற கருத்துக்கள் விவாத பூர்வமாக அந்நூல்களில் பேசப்படுகின்றன.

`துன்பம் எப்பொழுதும் எவ்வழியிலாவது சென்ற பிசகான நினைப்பின் காரியம்`, சரீரம் மனத்தின் வேலைக்காரன், சரீரத்தின் வியாதிகளை நீக்குதற்கு மனோ உற்சாகமுள்ள நினைப்புக்குச் சமமான வைத்தியனில்லை` என்பனபோல அந்நூல்களில் தென்படும் வரிகள் படித்தபின் நெடுநேரம் நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகின்றன.

`மனம்போல வாழ்வு` என்ற நூலின் ஆதாரமே மனத்தைச் செம்மைப்படுத்தினால் நல்ல வாழ்க்கை கிட்டும் என்ற சிந்தனைதான்.

`செயல்கள் நினைப்பின் மலர்கள். இன்பமும் துன்பமும் அதன் கனிகள். இவ்வாறாக மனிதன் இவைகளை விளைவித்துக் கொள்கிறான்` என, மனிதன் தன் வாழ்வைத் தானே நிர்மாணித்துக் கொள்வது குறித்து அழகிய நடையில் எழுதி நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகிறார் வ.உ.சி.

`மேம்பாடும் தெய்வத்தன்மையும் வாய்ந்த ஒழுக்கம் கடவுளின் கிருபையாலாவது, தற்செயலாவது உண்டானதன்று. அது நேர்மையான நினைப்புகளை இடைவிடாது நினைந்து வந்ததன் நேரான பயனாகவும் தெய்வத் தன்மை வாய்ந்த நினைப்புகளோடு நீடித்த காலம் விருப்பத்தோடு பழகிவந்த பழக்கத்தின் நேரான காரியமாகவும் உண்டானதே!`

`மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமையாகிய வஸ்திரத்தை நெய்து கொண்டிருக்கிறது. நினைப்பு நூல், நல்ல செயல்களும் தீய செயல்களும் பாவும் ஊடும், ஒழுக்கம் வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம்தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்திக் கொள்கிறது`

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளால் எவ்வளவு தூரம் வ.உ.சி. கவரப்பட்டிருக்கிறார் என்பதை இந்த அழகிய நடையே நமக்கு உணர்த்தி விடுகின்றது.

படைப்பிலக்கியத் துறையிலும் வ.உ.சி. முயன்றிருக்கிறார். மெய்யறம், மெய்யறிவு, பாடல திரட்டு, சுயசரிதை ஆகிய நான்கும் அவரது கவிதைப் படைப்புக்கள். மெய்யறம் மெய்யறிவு இரண்டும் திருக்குறளில் தோய்ந்த மனத்தில் இருந்து எழுந்தவை. அவையிரண்டும் அறம் பேசுகின்றன.

வ.உ.சி.யின் பல்வேறு அனுபவங்களின் திரட்டாக அமைந்ததுதான் பாடல் திரட்டு என்ற நூல்.

வ.உ.சி.யின் சிறைவாழ்வு எத்தகைய அரிய இலக்கியங்களைத் தமிழ் வாசகர்கள் பெற உதவியிருக்கிறது என்றெண்ணும்போது வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.

பாடல் திரட்டு என்னும் நூல் அவரது தனிப்பாடல்கள் பலவற்றின் தொகுப்பாகும். சிறை செல்வதற்கு முன் அவர் எழுதிய பாடல்களும் சிறையில் அவர் எழுதிய பாடல்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. ஒரு காலத்தில் வள்ளலாகத் திகழ்ந்த வ.உ.சி., பிற்காலத்தில் வறுமையில் வாடுகிறார். அப்போது அவர் எழுதிய ஒரு வெண்பா இந்தப் பாடல் திரட்டில் இடம்பெற்றுப் படிப்பவர் நெஞ்சை உருக்குகிறது.

`வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப்

பல்பொருளும்

தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று -

செந்தமிழ்வெண்

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம்

ஓடுகிறான்

நாச்சொல்லும் தோலும் நலிந்து!`

உணர்ச்சிபூர்வமாகப் படிப்பவர் நெஞ்சை அசைக்கக்கூடிய கவிதைகளைப் படைப்பதில் வ.உ.சி. வல்லவர் என்பதற்கு இந்த வெண்பா ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோற்றுப் பதம்.

வ.உ.சி.யின் சுயசரிதை நூல் கவிதையில் எழுதப்பட்டுள்ளது. அது அவரது வாழ்க்கைச் சம்பவங்களை விவரிப்பதோடு அவரது குருநாதரான திலகரின் வாழ்க்கைச் சம்பவங்களால் தான் பாதிக்கபட்டதையும் சேர்த்தே விவரிக்கிறது. வ.உ.சி. தம் சிந்தனை வளத்தாலும் நடை நலத்தாலும் தமது படைப்புக்களின் மூலம் தமிழை வளப்படுத்தினார். தமிழ் உள்ளவரை அவரது படைப்புக்கள் நிரந்தரமாய்த் தமிழை அலங்கரித்துக் கொண்டிருக்கும்.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News