சிறப்புக் கட்டுரைகள்

உசுரே நீ தானே! அத்தியாயம்- 22

Published On 2025-03-13 11:48 IST   |   Update On 2025-03-13 11:48:00 IST
  • மனசுக்குள் அவர்கள் பெயரை பதிய வைத்துக் கொண்டார் திவ்யாவின் அப்பா ரங்கராஜன்.
  • திவ்யா தப்பிக்க போட்ட திட்டம் என்பது தெரியாது.

மெதுவாக, இலையை கூர்ந்து கவனித்தான். பிரியாணி எண்ணெயின் மினுமினுப்பில், திவ்யா நகக்கீறலில் குறுக்குத் துறை கோவில் என எழுதியிருந்த எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய ஆரம்பித்தது. ஏதோ ஒன்றை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் "டேய்..." என டேவிட் கத்தினான்.

அவனை சூழ்ந்து நின்ற செந்தில், தியாகு, நெல்சனிடம் அதை காட்ட அவர்கள் முதலில் குழம்பி, பின் நிதானமாய் வாய் விட்டு படித்தார்கள். "கு... று...க்... குத்துறை கோவில்..." அவர்கள் படித்து முடித்ததும், டேவிட் கேட்டான்.

"புரியுதுதாடா. திவ்யாவுக்கு சாப்பிட வெச்ச பிரியாணி பார்சல் இலையில... அவளை கடத்துனவங்களுக்கு போக்கு காட்டிட்டு... அவளை தேடி யாராவது இங்க வந்தா... அவங்களுக்கு தெரியட்டும்னு இப்படி எழுதி இருக்கா... சோ... அந்த நல்லவன் திவ்யாவ இப்ப குறுக்குத்துறை கோவிலுக்கு கூட்டிட்டு போறான்னு நமக்குசொல்லியிருக்கா திவ்யா...!"

"அந்த நல்லவன் திவ்யாவை எதுக்கு இங்க இருந்து குறுக்குத்துறை கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்... திருநெல்வேலி குறுக்குத்துறையில முருகன் கோவில்தான் பேமஸ்...! அந்த கோயிலுக்கும், கடத்தல்காரன் நல்லவனுக்கும் என்ன சம்பந்தம்..."

செந்தில் கேட்டது, எல்லோருக் கும் "ஆமாம்ல..." என்பது போல் தோண, தலையை ஆட்ட, டேவிட் இப்படி சொன்னான்.

"கடத்துன நல்லவனுக்கு குறுக்குத்துறை சம்பந்தம் கிடையாது... ஆனா திவ்யாவுக்கு குறுக்குத்துறை முருகன் கோவில் ரொம்ப பிடிக்கும்..."

"அதனால..." - நெல்சன் குழம்பி போய் கேட்டான்.

"குறுக்குத்துறைக்கு திவ்யாவ அந்த நல்லவன் எதுக்கு கூட்டிட்டு போகணும்?" - இப்படி கேட்ட, டேவிட்டின் கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் எனில் சில மணித்துளிகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சில மணி துளிகளுக்கு முன்னால்...

அதே வேட்டையன் பங்களா...

"உன் தாலிய கட் பண்ணிட்டேன்னு அழுதது போதும். இப்ப நான் சொல்லப் போறத கேட்டு நீ ஷாக் ஆகக்கூடாது. ஆனா இனிமே நான் சொல்றபடி நீ கேட்க மறுக்கறேன்னு வையி... அடுத்த செகண்ட் அங்க பெரிசுங்கள்ல ஒரு உயிர் போயிடும்..."

திவ்யா கண்கலங்க, முகமூடி அணிந்த அந்த நல்லவனையே பார்த்தாள்.

"உன் கழுத்துல புதுசா ஒரு தாலி ஏறப்போகுது அது நான் கட்டப்போற தாலி... இனிமே நீ டேவிட்டோட பொண்டாட்டி இல்ல... என் பொண்டாட்டி..."

திவ்யா அதிர்ந்தாள்.

"உனக்கும், எனக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது எங்க தெரியுமா? உனக்குப் பிடிச்ச குறுக்குத் துறை முருகன் கோவில்ல. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்."

வாயில் போட்டிருந்த பிளாஸ்டரால் திவ்யாவால் தன் தலையை ஆட்டி மறுப்பு தெரிவிக்க மட்டுமே முடிந்தது.

"இப்ப கொஞ்ச நேரத்துல பிரியாணி வரும். எல்லாரும் சாப்பிடுறோம். உடனே, கிளம்புறோம். இங்க இருந்து திருநெல்வேலி போற வரை யோசி திவ்யா! பெரிசுங்க உயிரு முக்கியமா. இல்லை... சம்மதிச்சு பேசாம என்னை புருஷனா ஏத்துகிறது சரியான்னு..!"

இயக்குநர் A. ெவங்கடேஷ்

 

அவன் பேசிக் கொண்டு இருக்கும்போதே, ஒருவன் பிரியாணி பொட்டலங்களோடு வந்தான்,

"எல்லாருக்கும் கொடு. திவ்யாவுக்கு வலதுக் கையை மட்டும் அவிழ்த்து விடு. சாப்பிடுற வரைக்கும் வாயில் இருக்கும் பிளாஸ்டர எடுத்துவிடு..."

திவ்யா பக்கம் திரும்பினான். "இங்க பார் திவ்யா... சாப்பிட மட்டும் செய்யணும்... ஒரு வார்த்தை பேசக்கூடாது. கத்தக்கூடாது. சாப்பிட்டு முடிச்சதும் மறுபடியும் பிளாஸ்டர் ஒட்டி கார் டிக்கியில சமத்தா படுத்துகிட்டு திருநெல்வேலி வரை வந்தா போதும். அங்க போய் குறுக்குத்துறை முருகன் கோவிலில் நமக்கு கல்யாணம் முடிஞ்சதும் இனிமே உனக்கு ராஜ வாழ்க்கை தான். சாரி... ராணி வாழ்க்கை!"

திவ்யா முன் பிரியாணி பிரித்து வைக்கப்பட்டது.

"ம்... சாப்பிடு!"

அப்போது சாப்பிடும்போது, திவ்யா இலையில் நகத்தால் குறுக்குத்துறை கோவில் என எழுதினாள்.

வேட்டையன் பங்களா..

"இப்ப நாம் குறுக்குத்துறைக்கு உடனே கிளம்புவோம்... இது பத்தின தகவலை மேரிக்கு சொல்லி பெரியவங்களை கூட்டிட்டு அங்க வரச் சொல்லுவோம்!"

"வேண்டாம்..." - ஒற்றை வார்த்தையில் மறுத்தான் டேவிட். மற்றவர்கள் குழப்பமாய் பார்த்தனர்.

"மேரி... ஸ்டேஷனுக்கு போயி அங்கேயே பெரியவங்களோட இருக்கட்டும்... நாம எங்க போறோம்னு, இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்."

"ஏண்டா..." - நெல்சன்

"நாம வேட்டையன் பங்களாவுக்கு வரோம்கிறது யார் மூலமாவோ, திவ்யாவ கடத்தி வெச்சு இருக்கிற நல்லவனுக்கு தகவல் போயிருக்கு.. அதனால இப்போதைக்கு நாம குறுக்குத்துறை போறோம்கிறது, நம்மளை தவிர யாருக்கும் தெரிய வேண்டாம்... ம்... கிளம்புங்க...!"

அவர்கள் வேட்டையன் பங்களாவை விட்டு வெளியே வந்து காரில் ஏற செல்லவும் தன் ஆட்களுடன் வேட்டையன் பங்களாவுக்கு பெருமாள் வந்து சேரவும் சரியாய் இருந்தது. காரைவிட்டு இறங்காமலேயே பெருமாள் இப்படி கேட்டான். "டேவிட்டும் அவன் பிரண்சுங்க எங்க இவ்வளவு வேகமா கிளம்பி போறாங்க..."

"ஒருவேளை திவ்யாவ தேடி வந்து அவ இருக்கிற இடம் தெரிஞ்சு போறாங்களோ..." பெருமாள் அமர்ந்திருந்த காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வழுக்கை தலையன் சரியாய் கணித்தான்.

"டேய்... அந்த வண்டியை பாலோ பண்ணு... ஆனா, நாம பாலோ பண்றோம்கிறது தெரியாம... டிஸ்டன்ஸ் விட்டே போ..."

அவர்கள் பாலோ பண்ண ஆரம்பித்தார்கள். பின்னால் பெருமாளின் கார்கள் தங்களை தொடர்வது தெரியாமல் குறுக்குத்துறை நோக்கி சென்று கொண்டிருந்தான் டேவிட்.

அதே நேரம்..

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திவ்யாவின் அம்மா, அப்பா மற்றும் டேவிட்டின் அம்மா லிசா, அப்பா தேவசகாயம் ஆகியோருடன் ஹைவேயில் சென்று கொண்டிருந்த அந்த காரை ஓட்டுபவனை பார்த்து டிரைவர் சீட்டிக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருந்தவன் கேட்டான். "ஸ்டீபன்... இவங்களை தலைவரு சொன்ன இடத்துக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள இருட்டிடும் போலியே..."

"இல்ல பாண்டி... வானம் கறுக்கறுதுகுள்ள போயிடலாம்..." - வண்டி ஓட்டுபவன் பதில் சொன்னான். "ஓ... நம்பளை இவ்வளவு நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு மிரட்டி, இப்போ கார்ல கடத்திட்டு போற, இவன்க பேரு ஸ்டீபன், பாண்டியா?"

மனசுக்குள் அவர்கள் பெயரை பதிய வைத்துக் கொண்டார் திவ்யாவின் அப்பா ரங்கராஜன். கூடவே, "ஏம்பா... இந்த வயசான காலத்துல எங்கள எங்கப்பா கூட்டிட்டு போறீங்க... நாங்க ஒத்துழைச் சாலும் எங்க உடம்பு ஒத்துழைக்கணுமேப்பா... கொஞ்சம் கருணை காட்டுங்க... எங்கேயாவது பாத்ரூம் இருக்கிற இடமா பார்த்து நிப்பாட்டுங்க..." பவ்யமாய் கேட்டார்.

"பெரிசு... போற வழில வர்ற ஓட்டல் மாதிரி இடத்துல எல்லாம் நிப்பாட்ட மாட்டோம். வேணும்னா... ஹைவேஸ்ல ஏதாவது இடத்துல நிறுத்துறோம்.. இறங்கி காட்டுக்குள்ள போயிட்டு வாங்க... அது நீயா இருந்தாலும் சரி, உன் வீட்டு பொம்பளைங்கனாலும் சரி..."

இரக்கமே இல்லாமல் சொன்னான் வண்டியை ஓட்டுன ஸ்டீபன். "சரிப்பா..." ஈனஸ்வரத்தில் பதில் சொன்னார் ரங்கராஜன்.

பண்ணையார்பட்டி..

பெருமாள் வந்து போன பிறகும், பண்ணையார்பட்டியை விட்டு அகலாமல் அங்கேயே விசாரணையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அழகர்.

"ஐயா... இனிமே இந்த ஊர்ல நாம விசாரணை பண்ணிகிட்டே இருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லீங்க ஐயா... ஒண்ணு முருகநந்தம் ஷிப்ட் ஆகணும்... இல்ல ஸ்டேஷனுக்கு போயி, பெரிய அதிகாரிங்களுக்கு தகவல் தெரிவிக்கணும் ஐயா..."

"டேய்... மணியா... நீ கான்ஸ்டபிள் டூட்டிய மட்டும் பாரு... ஐயா, நொய்யான்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாத... என்ன கிழிக்கணும்... எப்படி எதை கிழிக்கணும்னு எங்களுக்கு தெரியும்..."

நக்கலாய் இப்படி இன்ஸ்பெக்டர் அழகர் மணியை கிண்டல் அடிக்கும்போது அவரது செல்போனின் "ப்ளீங்..." என்ற ஓசையுடன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. போனை எடுத்து, வாட்ஸ்அப் மெசேஜ், பார்த்த அழகரின் முகம் மாறியது. உடனே தனது கூட வந்திருந்த அனைத்து கான்ஸ்டபிளுக்கும் உத்தரவு போட்டார். "யோவ்... இந்த ஊர்ல விசாரணை ஓவர்... உடனே வண்டியில ஏறுங்க... நாம வேற இடத்துக்கு ஷிப்ட் ஆகிறோம்..."

அடுத்த நிமிடம் போலீஸ் ஜீப் அங்கிருந்து கிளம்பியது. வண்டியில் அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் மணி மனசு மட்டும் அடித்துக் கொண்டது. இந்தாளுக்கு யாரு மெசேஜ் அனுப்பினா... இப்போ எங்க போயிட்டிருக்காரு...குழப்பமாய் யோசித்தபடி மணி ரோட்டை பார்க்க அது திருநெல்வலி ஹைவே! ஜீப் திருநெல்வேலி ஹைவேசில் திரும்பியது. "நம்ம லிமிட் மேலூர்... இவரு திருநெல்வேலி ரூட்ல போறாரு..." - கான்ஸ்டபிள் மணி ஏகத்துக்கும் குழம்பி, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

"தொம்! தொம்!!"

திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த நல்லவனின் காரின் டிக்கியில் இருந்து அந்த சப்தம் கேட்டது.

"தொம்! தொம்!! தொம்!!!"

மீண்டும் டிக்கியின் சப்தம் கேட்க, பின் சீட்டில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி சொன்னாள்.

"ஏய் ராஜேசு... டிக்கியில் இருந்து திவ்யா தட்டுறா!" கோபமாய் திரும்பினான் அந்த நல்லவன்.

"ஏய்... பேர சொல்லாத... குறுக்குத்துறை போயி காரியம் முடியுற வரை, என் பேரு வெளியே தெரியக்கூடாது. யாரு கேட்டாலும் என் பேரு நல்லவன்... தெரியுதா?"

அவன் கத்திய கத்தலில் சப்த நாடியும் ஒடுங்கி, பயத்தில் முகம் வெளிற தலையாட்டினாள் அவள்.

"டேய்... வண்டிய ஓரம் கட்டுரா...!" வண்டி ரோடு ஓரமாய் நின்றது. வெயில் சுர்ரென்று ரோட்டில் விழுந்து ரோடு சூடு நல்லா தெரிந்தது.

"போ... இறங்கி டிக்கிய திறந்து என்னான்னு கேளு..."

ஒருத்தி இறங்கி, டிக்கியை திறந்தாள்.

சூரிய ஒளி பட்டதும் கண்களை கூச்சமாய் மூடி திறந்தாள் திவ்யா.

"ஏண்டி டிக்கிய தட்டுன?... என்ன வேணும்?" பிளாஸ்டர் வாயில் ஒட்டி இருந்தபடியால் திவ்யாவால் பேச இயலவில்லை. அந்தப் பெண் அவள் வாயில் இருந்த பிளாஸ்டரை பிரித்து விட்டாள். "பாத்ரூம் போகணும்..." திவ்யா கூற, முன் சீட்டில் எட்டிப் பார்த்து, அந்தப் பெண் கத்தினாள்.

"ஹலோ... இவ பாத்ரூம் போகணுமாம்..."

"சரி... அந்த காட்டுப்பக்கம் கூட்டிப் போயிட்டு வா... ஜாக்கிரதை"

கூறிவிட்டு முகமூடியை சரியாய் மாட்டிக் கொண்டான். இருவரும் காட்டுக்குள் மறைய காத்திருந்தனர் அந்த ராஜேஷ் என்கிற நல்லவனும், மற்றவர்களும்.

அவர்களுக்கு, இது திவ்யா தப்பிக்க போட்ட திட்டம் என்பது தெரியாது. அதே ரோட்டில் 25 கி.மீ. தள்ளி டேவிட் காரும், அதை தொடர்ந்து பெருமாள் காரும் வந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அங்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் வெயில் வெளுத்துக் கொண்டிருந்தது. (தொடரும்)

E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

Tags:    

Similar News