சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- வாரியார் சுவாமிகள்....

Published On 2022-08-25 17:32 IST   |   Update On 2022-08-25 18:58:00 IST
  • ஆகஸ்ட் இருபத்தைந்தாம் தேதி, 1906ஆம் ஆண்டு பிறந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஒரு தமிழ்ப் பெருங்கடல்.
  • வாரியார் சுவாமிகள் பேச்சில் நகைச்சுவை ஓர் இழையாய்க் கலந்து ஓடிக் கொண்டே இருக்கும்.

ஆகஸ்ட் இருபத்தைந்தாம் தேதி, 1906ஆம் ஆண்டு பிறந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஒரு தமிழ்ப் பெருங்கடல்.

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய பிரபுலிங்கலீலை முதல் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகள் வரை அவர் பயிலாத பக்தி இலக்கிய நூல் எதுவுமில்லை. பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள் அனைத்தையும் கசடறக் கற்ற தமிழறிஞர் அவர்.

நன்கு பாடவும் தெரிந்தவர். சொற்பொழிவின் இடையே பொருத்தமான பாடல்களை அவர் பக்கவாத்தியத்துடன் பாடுவதுண்டு. வீணை வாசிக்கத் தெரிந்தவர். தமிழிசைச் சங்கம் வழங்கிய இசைப் பேரறிஞர் விருது பெற்றவர்.

அவர் மனம் பக்தியில் முழுமையாய்த் தோய்ந்திருந்ததால், தம் பேச்சின் மூலம் மக்களிடையே எளிதாக பக்தி உணர்வை எழுப்ப அவரால் முடிந்தது. அவரை தரிசிக்கவும் அவர் கையில் இருந்து திருநீறு வாங்கிக் கொள்ளவும் கூட்டம் அலைமோதும்.

இன்று மிகவும் பிரபலமான திரை நடிகர்களின் படங்களுக்கு முதல்நாள் சேரும் கூட்டத்தைப் போலப் பலமடங்கு கூட்டம், வாரியார் சுவாமிகளின் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்க ஒவ்வொரு நாளும் கூடியது என்பது ஒரு வரலாற்று உண்மை.

பாமரர்களும் பண்டிதர்களும் ஒருசேர ரசிக்கும் பேச்சாக அவர் பேச்சு அமைந்திருந்ததும் அதிசயம்தான். மெத்தப் படித்த மேதாவிகள் அவர் பேச்சைக் கூர்ந்து கேட்டது போலவே, ஆட்டோ ஓட்டுநர்களும் அன்றாடம் கூலிவேலை செய்பவர்களும் கூட அவர் பேச்சை விரும்பிக் கேட்டார்கள். அவரது பக்திப் பெருக்கைப் பார்த்து அவரை அறுபத்து நான்காம் நாயன்மார் என்றே சொல்லி மகிழ்ந்தவர்கள் உண்டு.

வாரியார் சுவாமிகள் பேச்சில் நகைச்சுவை ஓர் இழையாய்க் கலந்து ஓடிக் கொண்டே இருக்கும்.

'காமன் - அவனிடமிருந்து யார்தான் தப்ப முடியும்? அவன் எல்லோருக்கும் காமன்!' என்று அவர் சொல்லும் போது இளைஞர்கள் சிரித்து மகிழ்வார்கள்.

'இது அருந் - தேன். இதை அருந்தேன் என்று எவன் சொல்லுவான்? அருந்தவே இருந்தேன் என்பான்!, 'ராமனுடைய பாத - கமலம், ராவணனுடைய பாதக - மலத்தை நீக்கியது!' என்பன போன்ற சிலேடை நயம் நிறைந்த வாக்கியங்களை அவர் போகிற போக்கில் சொல்லிச் செல்வார்.

முத்து மாலையில் இடையிடையே பதித்த பவழங்களைப் போல அந்த அழகிய வாக்கியங்கள் கேட்பவர்களைச் சொக்க வைக்கும்.

நடிகர் திலகம், சிவ பெருமானாக வேடமேற்று நடித்த திருவிளையாடல் படம் வெளிவந்த தருணம். அந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் கருத்துச் சொல்லுமாறு ஒரு வாரப் பத்திரிகை, சிவபக்தரான வாரியார் சுவாமிகளைக் கேட்டது. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

'சிவாஜி திருவிளையாடல் படத்தில் நல்ல முறையில் சிவஜியாக நடித்திருக்கிறார்!'

வாரியார் சுவாமிகள் தம் கூட்டத்திற்கு வரும் சிறுவர் சிறுமியரிடம் ஏதாவது கேள்வி கேட்பார். சரியான பதிலைச் சொல்பவர்களுக்கு ஓர் ஆன்மிகப் புத்தகத்தை வழங்கி மகிழ்வார்.

ஒருமுறை தம் கூட்டத்திற்கு வந்திருந்த குழந்தைகளைப் பார்த்து 'இங்கே யாரெல்லாம் கடைக்குட்டிகள்? எழுந்து நில்லுங்கள் பார்க்கலாம்!' என்றார். சில குழந்தைகள் எழுந்து நின்றார்கள்.

'அதுசரி. நீங்கள்தான் கடைக்குட்டி என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? உங்கள் பெற்றோரல்லவா முடிவு செய்ய வேண்டும்?' என்று அவர் கேட்க கூட்டம் சிரித்து மகிழ்ந்தது.

அவர் சொற்பொழிவின் இடையே பல சமையல் குறிப்புகளையும் சொல்வார். பீமன், கும்பகர்ணன் போன்றோரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டைப் பற்றிச் சொல்லி அப்படியே சில தின்பண்டங்களைச் செய்வது பற்றிய குறிப்புகளையும் அள்ளி வீசுவார்.

'ஆப்பிள் பஜ்ஜி செய்வது எப்படி, பைனாப்பிள் ரசம் செய்வது எப்படி?' என்றெல்லாம் அவர் விவரிக்கும் போது மகளிர் குலம் வியப்பில் ஆழும்.

பருத்த உடம்போடு நல்ல திடகாத்திரத்தோடு பக்திப் பழமாய் மேனியெல்லாம் திருநீற்றுடன் அவர் தென்படுவார்.

'எதற்கு சுண்ணாம்பு அடிப்பது மாதிரி உடலெல்லாம் திருநீறு பூசியிருக்கிறீர்கள்?' என்று கிண்டலாக ஒருவர் அவரிடம் கேட்டபோது, 'கட்டிய வீட்டுக்குத்தான் சுண்ணாம்பு பூசுவார்கள். ஒன்றுக்கும் உதவாத குட்டிச் சுவருக்கெல்லாம் யாரும் சுண்ணாம்பு பூசுவதில்லை!' என்று கேலி செய்தவரைக் கூர்மையாகப் பார்த்து அவர் பதில் சொன்னார். பலர் மத்தியில் கேலி செய்தவர் வெட்கத்தோடு தலைகுனிய நேரிட்டது.

வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதனுக்கு வாரியார் சுவாமிகள் மீது மதிப்பிருந்தது. வாரியாருக்கும் கி.வா.ஜ.விடம் அன்புண்டு.

பல்வேறு பணிச்சுமையில் இருந்த கி.வா.ஜ. ஒருமுறை வாரியார் சுவாமிகள் பேச்சைக் கொஞ்ச நேரமாவது கேட்கும் எண்ணத்தோடு வந்து அமர்ந்தார். அப்போது 'அனுமன் சொல்லின் செல்வன்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் வாரியார்.

சற்றுநேரம் அந்தப் பேச்சைக் கேட்ட கி.வா.ஜ., தன் பணிநிமித்தம் மெல்லப் புறப்படலானார். அதை மேடையில் இருந்தவாறே கவனித்து விட்டார் வாரியார். 'அனுமன் மட்டும்தானா சொல்லின் செல்வன்? என்னிடமும் அந்த ஆற்றல் உள்ளது. பாருங்கள். நான் ஏதாவது சொல்லின் தொடர்ந்து கேட்காமல் முதல் வரிசையில் உள்ளோர் எழுந்து செல்வர்!' என்றார் அவர் சிரித்தவாறே.

அந்தச் சிலேடையில் மயங்கிய சிலேடைச் செல்வரான கி.வா.ஜ., புறப்பட்டுச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு முழுமையாக அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டு ரசித்துவிட்டுச் சென்றார்.

*காஞ்சி மகாசுவாமிகள் மேல் மிகுந்த மதிப்புடையவர் வாரியார். ஆன்மிகத்திற்குப் பெருந்தொண்டு செய்த வாரியார் மேல் மிகுந்த அன்புடையவர் மகாசுவாமிகள்.

மகாசுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வாரியார் பேச அழைக்கப்பட்டார். 'வாரியார் சுவாமிகள் வாரியார் சுவாமிகளைப் பற்றியே பேச வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர். தன்னைப் பற்றித் தானே பேசுவது பண்பாடல்லவே எனத் தயங்கினார் வாரியார்.

அங்கிருந்த மகாசுவாமிகள், 'நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசிலும் உங்கள் சொந்த செலவுக்குக் கொஞ்சம் தொகையை வைத்துக் கொண்டு மற்றவை அனைத்தையும் கோயில் திருப்பணிகளுக்கே கொடுத்து விடுகிறீர்களே? அதைப் பற்றிச் சொல்வதுதானே?' என்று மக்கள் முன்னிலையில் கனிவோடு வாரியார் சுவாமிகளிடம் வினவினார்.

'என்மேல் கொண்ட அன்பால் உலகம் அறியட்டும் என நான் செய்துவரும் எளிய தொண்டைப் பிரகடனப் படுத்தியுள்ளார் மகாசுவாமிகள்!' என நெகிழ்ந்தார் வாரியார்.

மகாசுவாமிகளை வாரியார் தரிசிக்கச் சென்றபோது அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்க முயன்றார். அப்படிச் செய்ய வேண்டாம் எனத் தடுத்துவிட்டார் சுவாமிகள். ஏன் எனத் திகைப்போடு வாரியார் கேட்டபோது சுவாமிகள் சொன்ன பதில் இதுதான்:

'உங்கள் கழுத்துச் சங்கிலியில் எப்போதும் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னை விழுந்து வணங்கும்போது அந்தச் சிவலிங்கம் தரையில் படுமல்லவா? சிவலிங்கம் தரையில் படக் கூடாது என்பதால்தான் என்னை விழுந்து நமஸ்கரிக்க வேண்டாம் என்றேன்!'

தன் சிவபக்தியை மகாசுவாமிகள் பெரிதும் மதிக்கிறார் என்றறிந்து வாரியார் மனம் நிறைவில் ஆழ்ந்தது.

*பக்தி இலக்கியம் தொடர்பான தம் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியவர் வாரியார்தான் என்று மகாசுவாமிகள் கருதியதுண்டு.

'கைத்தல நிறைகனி அப்பமொடவில் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி' என்று தொடங்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல் விநாயகரைப் பற்றியது. அந்தப் பாடலில் சிவபெருமான் முப்புரத்தை எரித்தது, விநாயகர் யானை வடிவில் சென்று வள்ளி திருமணத்திற்கு உதவியது என வரும் புராணத் தகவல்கள் பலரும் அறிந்தவை.

அதே திருப்புகழில் 'முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!' எனவும் ஓர் அடி வருகிறது. 'இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை மலைகளுள் மிகவும் முற்பட்டதான மேரு மலையில் முதல்முதலில் எழுதிய முதன்மையானவனே!' என்பது இதன் பொருள்.

வியாசர் மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல விநாயகர் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டு எழுதினார் என்ற கதை புராணத்தில் இருக்கிறது. ஆனால் முத்தமிழை விநாயகர் மேருமலையில் எழுதிய செய்தி எந்தப் புராணத்தில் உள்ளது?

இதை அறிய விரும்பிய மகாசுவாமிகள், ஓர் அன்பரை வாரியார் சுவாமிகளிடம் சென்று விளக்கம் கேட்டுவரச் சொல்லி அனுப்பினார்.

வாரியார், 'அந்தச் செய்தி எந்தப் புராணத்திலும் இல்லையென்றும் ஆனால் செவிவழிச் செய்தியாகப் பல்லாண்டுகளாகப் பொதுமக்களிடையே உலவி வருவதாகவும்' விளக்க மளித்தார். வாரியார் சொன்னால் அது கட்டாயம் சரியாகத்தான் இருக்கும் என்று மகாசுவாமிகளும் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டார்.

வாரியார் அருணகிரிநாதரின் திருப்புகழ்மேல் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். 37 ஆண்டுகள் 'திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை நடத்தியவர்.

ஏறத்தாழ நூற்றைம்பது நூல்களின் ஆசிரியர். 'சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, பாம்பன் சுவாமிகள் வரலாறு' போன்ற அவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

முருகனைப் பற்றிச் சொற்பொழிவு செய்வதற்காக லண்டன் சென்ற அவர், இந்தியா திரும்பிவரும்போது 1993 நவம்பர் ஏழாம் தேதியன்று விமானப் பயணத்திலேயே தம் எண்பத்தேழாம் வயதில் முருகன் திருவடிகளைச் சென்றடைந்தார்.

அவரைப் போற்றும் வகையில் காட்பாடிக்கு அருகே உள்ள அவர் பிறந்த ஊரான காங்கேய நல்லூரில் அவருக்கு ஒரு சமாதிக் கோயில் அமைக்கப் பட்டுள்ளது. இந்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அவர் உருவப் படத்தைத் தாங்கிய அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

ஆன்மிகத்திற்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தூய தவ வாழ்க்கை வாழ்ந்த வாரியார் சுவாமிகளை மனத்தில் நினைத்துப் போற்றுவதால் நம் மன மாசுகள் அகலும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News