வெற்றிதரும் கொல்லூர் மூகாம்பிகை
- சுயம்பு லிங்கத்தில் அருள் பாலிக்கும் தேவி, உத்பவ லிங்கமாக சக்தியும் சிவமும் இணைந்தவளாக இருக்கிறாள்.
- பழைய புராண வரலாற்றைக் கொண்ட அரிய தலம் இது.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லூர் திருத்தலம் சக்தி வாய்ந்த அம்மனின் திருத்தலம் ஆகும். இங்கு மூகாம்பிகை தேவி குடியிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.
இந்தத் திருத்தலம் உடுப்பியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் குடசாத்ரி மலையில் ஒரு சிகரத்தில் இது உள்ளது.
கொல்லூர் பெயர்க் காரணம்
மிகப் பண்டைய காலத்தில் துவாபர யுகத்தில் கோலன் என்ற மகரிஷி தவம் புரிந்த தலம் இது. கோல மகரிஷி தவம் புரிந்த தலம் என்பதால் இது கொல்லூர் என்ற பெயரைப் பெற்றது.
இங்கு கொலுவீற்றிருக்கும் மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும்படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள்.
மூகாம்பிகையின் இந்த ஆலயம் தெள்ளிய நீர் ஓடும் சவுபர்ணிகா நதிதீரத்தில் அமைந்துள்ளது. குடசாத்ரி மலையில் இருந்து உருவாகி விழும் 64 நீர்வீழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சவுபர்ணிகா நதியாக மாறிப் பாய்கிறது. இது 64 மூலிகைகளின் நீராக அமைகிறது. தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும் தீர்த்தம் இது.
சுயம்பு லிங்கத்தில் அருள் பாலிக்கும் தேவி, உத்பவ லிங்கமாக சக்தியும் சிவமும் இணைந்தவளாக இருக்கிறாள். கர்ப்ப கிரக விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
கர்ப்பகிரகத்தில் அம்பாளின் முன்னர் தரையோடு தரையாக சுயம்பு லிங்கம் உள்ளது. பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்கள் வலது புறத்தில் இருக்க, ஒரு தங்கச் சங்கிலி இடது புறத்தைத் தனியே பிரிக்கும் காட்சி அரிய காட்சியாகும்.
கர்பகிரகத்தின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் சிம்ம வாகனம் இருக்க, இரு புறமும் தியான மண்டபம் உள்ளன.
இந்த தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கரர் என்றும் ஸ்ரீ சக்ரத்தின் மீது இதை அவர் நிறுவியுள்ளார் என்றும் வரலாறு கூறுகிறது.
வெளி பிரகாரத்தில் சரஸ்வதி மண்டபம் உள்ளது. சவுந்தர்ய லகரியை ஆதிசங்கரர் இயற்றிய இடம் இதுவே எனக் கூறப்படுகிறது.
ஆதி சங்கரர் அமைத்துள்ள வழிபாட்டு முறையின் படியே கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன. சங்கர பீடம் ஒன்றை கர்ப்பகிரகத்தின் மேற்குப் புறத்தில் காணலாம்.
கர்ப்பகிரகத்தின் முன்னே கொடிக் கம்பம் உள்ளது. அருகில் ஒரே கல்லினால் ஆன விளக்குத்தூணில் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்.
புராண வரலாறு
பழைய புராண வரலாற்றைக் கொண்ட அரிய தலம் இது. கம்ஹாசுரன் என்ற ஒரு அசுரனை தேவி வதைத்த தலம் இது. அரிய தவம் ஒன்றைச் செய்து பூமியை நடுங்கச் செய்ய உள்ளம் கொண்ட அந்த அசுரனை பார்வதி தேவி பூமியைப் பாதிக்கும்படியான வரத்தை அவன் கேட்பதைத் தடுத்து நிறுத்த அவனை ஊமையாக்கினாள். ஆகவே அவன் மூகாசுரன் என்ற பெயரைப் பெற்றான். மூகம் என்றால் ஊமை என்று பொருள்.
என்றாலும் கூட அசுரர்களின் குருவான சுக்ராசாரியரின் ஆசியினால் அவன் பேசும் சக்தியைப் பெற்று முனிவர்களைக் கொல்ல ஆரம்பித்தான். இந்தக் கொடுஞ்செயல் பொறுக்க முடியாதபடி எல்லை தாண்டிச் சென்ற போது பார்வதி தேவி மூகாசுரனை வதம் செய்தாள். ஆகவே மூகாம்பிகை என்ற பெயரையும் பெற்றாள். ஆகவே இந்தத் தலம் கொல்லூர் மூகாம்பிகை தலம் ஆனது.
சங்கரர் பற்றிய வரலாறு
இன்னொரு சுவையான வரலாறும் இந்த கோவில் அமைந்த விதம் பற்றிக் கூறப்படுகிறது.
ஆதி சங்கரர் சரஸ்வதிக்கு ஒரு ஆலயத்தை கேரளத்தில் அமைக்க விரும்பினார். இதற்காகத் தவம் இயற்றிய போது சரஸ்வதி தோன்றி ஆதி சங்கரரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அருளினாள். ஆனால் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அவர் தன்னைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் ஆனால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதுமே நிபந்தனையாக விதிக்கப்பட்டது. இதன்படி ஆதிசங்கரர் முன்னே நடக்க பின்னால் தேவி வந்து கொண்டிருந்தாள். தேவியின் நூபுர ஓசை ஆதிசங்கரர் காதில் விழ அவர் மகிழ்ச்சியுடன் முன்னேறினார். ஆனால் திடீரென்று அந்த ஓசை நின்று விட சங்கரர் திரும்பிப் பார்த்தார். அவர் இப்படி நிபந்தனையை மீறி விட்டதால் தேவி அந்த இடத்திலேயே இருந்து விட்டாள். அந்த இடம் தான் கொல்லூர். என்றாலும் தன்னை நோக்கிக் கடும் தவம் இயற்றிய காரணத்தால் தேவி கேரளத்தில் சோட்டாணிக்கரை அம்மன் கோவிலிலும் மூகாம்பிகை ஆலயத்திலும் இருந்து அருள் பாலிப்பதாக வாக்குத் தந்தாள். ஆகவே தான் இன்றளவும் சோட்டாணிக்கரை அம்மன் கோவில் மூகாம்பிகை கோவில் திறக்கப்பட்ட பின்னரே உடனே திறக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.
வாக்தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம். ஆகவே ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டு சரஸ்வதியின் அருளைப் பெறுகின்றனர். சரஸ்வதி பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறை சார்ந்தோர், ஓவியர்கள் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பித்து அருள் பெறுகின்றனர்.
இங்குள்ள அம்மனின் சிலை பஞ்சலோகத்தினால் ஆனது. காலையில் சரஸ்வதியாகவும் பகலில் லட்சுமியாகவும் மாலையில் பார்வதியாகவும் அம்பிகை வழிபடப்பட்டு போற்றப்படுகிறாள்.
விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இங்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளார். மூகாம்பிகை அம்மனுக்கான முக கவசத்தையும் அவர் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஷிமோகா பிரதேசமான அன்றைய கேளடி பகுதியை ஆண்ட கேளடி நாயக்க மன்னர்கள் இந்தக் கோவிலை நல்ல முறையில் அமைத்தனர். இதே வம்சத்தைச் சேர்ந்த ராணி சென்னம்மாவும் இந்தக் கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடும் இந்தத் திருத்தலத்திற்கு அரசியல் தலைவர்களும் பெருமளவில் வந்து வழிபடுவது வழக்கம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.
இங்கு வந்து வழிபட்டவுடன் எந்தக் காரியத்திலும் பக்தர்கள் வெற்றியை அடைவது நிதர்சனமாக இன்று வரை காணப்படுகிறது.
பங்குனி மாதம் மூல நட்சத்திர தினத்தன்று தேவி அவதரித்த நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி கொண்டாடுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் சுமார் 5 ஆயிரம் பேர் இங்கு வந்து வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச உணவு வழங்கப்படுகிறது.
இங்கு தங்குவதற்கு வசதிகள் நல்ல முறையில் உள்ளன. 250 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள விருந்தினர் விடுதியில் 350 அறைகள் உள்ளன. சுமார் 4000 பேர் தங்க இங்கு வசதி உள்ளது..
ரகசிய பொக்கிஷ அறை
இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போலப் பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள ரகசிய அறை பற்றிக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது. அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள சங்கரபீடத்தில் ஒரு நாகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே ரகசியத்திற்கான அடையாளமாகக் கூறப்படுகிறது.
இந்தப் பீடத்தின் அடியில் பெரிய புதையல் இருப்பதாகவும், அதில் ஏராளமான வைரம், மரகதம் உள்ளிட்ட மணிகளோடு தங்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்மனுக்கு 90 கிலோ தங்கத்தினாலான தங்க ரதம் ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 48 கோடி ஆகும். இது தவிர பல கோடி பெறுமான தங்க நகைகளும் சுமார் 50 கோடிக்கும் மேலான மதிப்புள்ள மாணிக்கம், வைரம் கொண்ட நகைகளும் அம்மனுக்கு உள்ளன. கர்நாடகத்தின் செல்வச் செழிப்புள்ள ஆலயம் இது என்றால் அது மிகையல்ல.
இங்கு அம்மனுக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை மட்டுமே உண்டு; அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் லிங்கத்திற்கு மட்டும் நடைபெறும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேவிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. மூகாம்பிகையின் குங்குமத்தை இட்டுக் கொண்டால் கெட்ட தலையெழுத்து நீங்கும் என்பது ஐதீகம்.
லிங்கத்தின் நடுவே தங்க நிற ரேகை உள்ளது. அபிஷேக சமயத்தில் இதைக் காணலாம்.
எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள சண்டி ஹோமத்தை பக்தர்கள் இங்கு செய்கின்றனர்.
ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் துன்பப்படுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய அவை அகலும். இங்கு ஒரு கோசாலையும் உண்டு.
பொதுவாகவே தேவியைக் கும்பிட்டால் அவள் தனம் தருவாள், கல்வி தருவாள், தளர்வறியா மனம் தருவாள். தெய்வ வடிவு தருவாள். நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தருவாள் நல்லன எல்லாம் தருவாள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு தேவி மூகாம்பிகை. அவள் குடியிருக்கும் இடம் கொல்லூர். அம்மனை வணங்குவோம்; அருள் பெறுவோம்.
தொடர்புக்கு:-snagarajans@yahoo.com