- திருமந்திரம் திருமூலரால் எழுதப்பட்ட முதல் சைவ சித்தாந்தப் படைப்பு என்று கருதப்படுகின்றது.
- உடலை விட மனம் தியானத்திற்கு மிக முக்கியமாகிறது.
விஞ்ஞானிகளும், பகுத்தறிவாளர்களும் உலகத்திற்கு செய்துள்ள, செய்து வரும் தொண்டுகள் ஏராளம்.
திருமூலர், திரு மந்திரம் என அடிக்கடி குறிப்பிடுகின்றோம் அல்லவா! அந்த திருமூலர் சொல்லிய கருத்து புதையல்கள் ஏராளம்.
திருமந்திரம் திருமூலரால் எழுதப்பட்ட முதல் சைவ சித்தாந்தப் படைப்பு என்று கருதப்படுகின்றது. 'அன்பே சிவம்' என்பதனை அன்றே வலியுறுத்தியவர். இதன் காலத்தினை உத்தேசமாக நிர்ணயித்து 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என கூறப்படுகின்றது. திருமூலர் பதினென் கீழ் சித்தர்களில் ஒருவர் ஆவார். நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுபவர். பன்னிரெண்டு திருமுறைகளில் 'திருமந்திரம்' பத்தாம் திருமுறையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. பொதுவில் இத்தகு சித்தர்கள் கடும் தவத்தின் மூலம் அஷ்டமா சித்திகளை பெற்றிருந்தனர். இத்தகு நூல்களை நான் அறிய காரணம் என் கணவர் ஸ்ரீபால் தான். இந்த புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்வார். படித்திருக்கேனா என கேள்விகள் கேட்டு 'சோதனை' செய்வார். பரீட்சை வைத்து மார்க் போடாத குறைதான். சரியான பதில் சொல்லாவிடில் பெஞ்சு மேல் ஏற்றி முட்டி போட வைக்காததுதான் பாக்கி. மருத்துவ வேலை, குடும்ப பொறுப்பு காரணமாக ஆழ்ந்த அறிவினை அடைய முடியவில்லை. மேம்புல் மேய்ந்தது போல படித்தே பல ஆச்சர்யமான விஷயங்களை அறிந்தேன். இன்றைய கால கட்டம் வேறு. டி.வி., வீடியோ, யூடியூப், பேட்டிகள் இவற்றின் மூலம் செய்திகள் நிறைய கொட்டுகின்றன. வீட்டு வேலைகள் செய்யும் போதும், பயணம் செய்யும் போதும் இவைகளை கேட்கலாமே. செல்போனில் அரட்டை அடித்து உபயோகமற்ற செய்திகளில் வாழ்க்கையினையும் நேரத்தினையும் வீணடிக்காமல் நல்ல முறையில் பயனுள்ள செய்திகளை அறியலாமே.பல வருடங்களுக்கு முன்னால் திருமூலரிடம் இருந்து எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அது சற்று வேறுபட்டு இருந்தது. அவரைப் பற்றி படிக்கும் போது பல காலம் தவம் இருந்து அஷ்டமா சித்திகளை அடைந்தவர். அவரால் தன் உடலினை அணுவினை விட சிறியதாக்கிக் கொள்ள முடியும். மலையினை விட பெரியதாக்கிக் கொள்ள முடியும் என்பதை அறிந்தேன். மிக சிறியதாக தன்னை மாற்றிக் கொள்வதினை அனிமா என்பர். மிகப்பெரிதாக தன்னை மாற்றிக் கொள்வதினை மகிமா என்பர். தன்னை மிக மிக சிறியதாக்கி ஒளியினை விட வேகமாக ஒரு குறிப்பிட்ட வழி முறைகளை பின்பற்றி 1008 அண்டங்களுக்கு சென்று வந்ததனை திருமூலரே பதிவு செய்துள்ளார். இதற்காக சொரூப குளிகை, கமலினி குளிகை இவற்றினைத் தயாரித்து ஒளி ரூபமாக பயணம் செய்துள்ளார். ஒரு அண்டத்திற்கு அவர் சென்று அங்குள்ள சித்தர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அவர்கள் திருமூலரைப் பார்த்து 'நீங்கள் எத்தனை யோகங்களை கற்றுள்ளீர்கள்?' என்று கேட்டனராம்.
திருமூலர் "60 கோடி யோகங்களில் சித்தி பெற்றுள்ளேன்? என்றதற்கு அவர்களின் பதில் 'இன்னமும் நீங்கள் இளம் சித்தராகத்தான் இருக்கின்றீர்கள்' என்றனராம்.
மற்றொரு அண்டத்தில் சித்தர்கள் சிலைகளாகவே இருந்துள்ளனர்.
இன்னொரு அண்டத்தில் சித்தர்கள் 7 லட்சம் பாடல்களை படித்தபடி இருந்தனர். அவை சிவபிரான் பார்வதிக்கு சொன்ன பாடல்கள் என்றனர்.
திருமூலரே இந்த 7 லட்சம் பாடல்களை 1000 பாடல்களாக ஏற்கனவே நந்தி தேவர் அமைத்து கொடுத்துள்ளதினை கூறியுள்ளார். நந்தி தேவர் திருமூலரின் குரு ஆயிற்றே.
இப்படி ஏராளமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒளி உடல் பயணம், ககன மார்க்கம் இவை எல்லாம் என்னை வெகுவாய் கவர்ந்தன. நாமும் இப்படியெல்லாம் பயணம் செய்தால் எப்படி இருக்கும்.
(நீயும் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய். பிறகு அண்டத்திற்கு செல்வதனைப் பற்றி யோசிக்கலாம்) திருமூலர் விஞ்ஞான சித்தர். இதனை முதலில் தெரிந்து கொள். இப்போதைக்கு ரோட்டில் ஒழுங்காக வண்டியை ஓட்டிச் செல். பிறகு ஒளி உடலாய் அண்டங்களுக்கு செல்லலாம் என்று கறாராய் சொன்னார் என் கணவர். இருந்தாலும் எனக்கும், திருமூலருக்கும் ஒளி பயணம் பற்றிய பேச்சுவார்த்தை இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இப்படித்தான் கோரக்க சித்தரும். அவர் எழுதியுள்ள சந்திர ரேகை 200 என்ற புத்தகத்தினை அனைவரும் படிக்க வேண்டும் என்பதே அதை படித்தவர்கள் அனைவரது ஆசையாகவும் இருக்கும். நடந்தவை, நடப்பவை, இனி நடக்க இருப்பவை இவற்றினை எப்படி இவரால் துல்லியமாக இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூற முடிந்தது.
இதுவே மெய் ஞானம்.
இந்த இடத்தில் அகத்திய மாமுனிவரைப் பற்றி சில வரிகளாவது கூறாமல் இருக்கலாமா? சப்த ரிஷிகளில் ஒருவர். சித்த மருத்துவத்தின் தந்தை. தமிழின் தந்தை, தமிழ் இலக்கணம் 'அகத்தியம்' உருவாக்கியவர். தமிழ் சித்தர்களில் முதன்மையானவர். சித்தர் என்றாலே அட்டமா சித்திகளும், அண்டங்களுக்கு செல்பவரும், ஒளி உடல் பயணம் என அண்டங்களுக்கு பயணிப்பவர்கள்தானே. அகத்திய மாமுனிவர் மற்றும் மேற்கூறியவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அவர்களின் சாதனைகளை ஒவ்வொரு வரும் படித்து அறிய வேண்டும்.
இந்த மகான்களின் விஞ்ஞானம், மெய்ஞானம் இவற்றுக்கு முன்னே நாம் எம்மாத்திரம் என்பது புரியும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இன்னும் எண்ணில் அடங்கா ஏராளமான சித்தர்கள் நம் நாட்டுக்கே, நமக்கு மட்டுமே உரிமை கொண்டாடும் அருளினைக் கொடுத்த பிரபஞ்ச சக்திகள், இதனை எப்பொழுதுதான் நாம் உணரப் போகின்றோம்.
மிக பண்டைய கால நிகழ்வுகளை கூறு கின்றீர்களே எனலாம். 'பாபா' வழிபாடு இங்கு பிரபலம் இல்லையா? ஸ்ரீ ராமானுஜர் 'அனைவரும் சமம்' அனைவரும் முக்தி அடைய வேண்டும். ஓம் நமோ நாராயணா என்ற அவருக்கு அவர் குரு அளித்த ரகசிய மந்திரத்தினை மதில் சுவர் மேல் நின்று அனைவருக்கும் வழங்கவில்லையா? ஸ்ரீராமானுஜரை ஆதிசேஷனின் அவதாரம் எனவும், ராமாயணத்தில் லட்சுமணனாக அவதாரம் எடுத்ததாகவும், கிருஷ்ண அவதாரத்தில் பலராமர் அவதாரம் எனவும் குறிப்பிடுவர். இவருக்கு நாம் காட்டும் மரியாதையாக மக்களிடையே எந்த வேறுபாடும் இன்றி இருக்கின்றோமா?
ஒருமுறை ரமணா ஆசிரமத்தில் உணவு அருந்தும் வேளையில் ஒரு பெண்மணி உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காரணம் அவர் உள்ளே வரக்கூடிய நிலையில் இல்லை. ரமண பகவான் தானே அந்த பெண்மணிக்காக உணவு எடுத்துச் சென்றார். இவற்றினை எல்லாம் படிக்கும் போது ஒவ்வொருவரும் சிந்திப்பர்.
சிலுவையில் அறைந்த போதும், 'அறியாமல் இவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து விடுங்கள்' என்ற இயேசு பிரானின் வார்த்தைகள் யார் மனதினையும் கலங்கச் செய்யும் தானே.
இந்த மனப்பக்குவம் பல மகான்கள், பல பகுத்தறி வாளர்களைப் பற்றி படிக்கும் போது அவரவர் மனம் பக்குவம் பெறும். எல்லா கருத்துக்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ கிடையாது. படியுங்கள், கேளுங்கள், சிந்தியுங்கள், தெளிவு பிறக்கும்.
சூழ்நிலை சரியாக இல்லாவிடின் மனிதன் தவறு செய்கின்றான். இதன் காரணமே குழந்தைகளிடம் புராண கதைகளைக் கூறி தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் என்ற ஒரு சின்ன அச்சுறுத்தலை ஏற்படுத்தி வைத்திருந்தனர். அச்சப்பட வேண்டியவற்றிற்க்கு அச்சப்படத்தான் வேண்டும்.
தானே தன்னை ஒழுக்க முள்ளவராக மாற்றிக் கொள்ள ஆன்ம பலம் வேண்டும். இதற்கு முதலில் உடல் ஆரோக்கியம் வேண்டும். இதன் காரணமே உணவு முறை, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, யோகா இவை அடிப்படை தளமாக வலியுறுத்தப்படுகின்றன. இவை ஒருவரை தன் ஆழ் மனதோடு நம்முள் உள்ள ஆத்ம ஒளியோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்தும். பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்படும். இது அவரவர் உணரும் அனுபவமாக இருக்கும். ஆனால் இதற்கெல்லாம் ஒரு குரு, அசையா நம்பிக்கை, கடின உழைப்பு தேவைப்படும்.
எண்ணங்களின் தொகுப்பாக திகழும் மனம் எண்ணங்களின் தொகுப்பினை மூளையில் பதிய வைக்கின்றது. எண்ண ஓட்டத்தினை நிறுத்தாதவரை அது ஓடிக் கொண்டே இருக்கும். அந்த எண்ண ஓட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கினால் மட்டுமே கொஞ்சமாவது ஒழுங்காய் இருக்கும். இல்லையென்றால் ஆளையே புரட்டி எடுத்து விடும்.
ஆசையை துறக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம். ஒரு இனிப்பு கண் எதிரே இருந்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முடிந்த வரை சிறிது நேரம் தள்ளிப் போடுங்கள். இது ஒரு உதாரணம். ஒரு பொருள் வாங்க தேவையின்றி அதிக ஆசை இருக்கின்றதா? மனதை கட்டிப் போட்டு வாங்காதீர்கள். இப்படி சிறு சிறு முயற்சிகளின் மூலம் பேராசை, ஆசை இவற்றினை கட்டுப்படுத்த முயல வேண்டும்.
இதில் எண்ண ஓட்டம் நிற்கும். மனம் என்ற தகவல் மையல் சக்தி குறைய ஆரம்பிக்கும். இதற்காக காடு, குகை என செல்ல வேண்டாமே, பிறகு இந்த மனமே ஆன்மீக பாதையில் ஆன்மாவாக வந்து விடும்.
அநேகர் ஆரம்ப காலத்தில் தியானத்தினை பற்றி குறிப்பிடும் போது சில குறைபாடுகளை கூறுவார்கள். உடற்பயிற்சி செய்து விடுகின்றோம். மூச்சு பயிற்சி, யோகா இவைகளை கூட தகுந்த ஆசிரியர் மூலம் கற்றுக் கொள்கிறோம். ஆனால் தியானம் மட்டும் கடினமாய் இருக்கின்றது. ஒரு நிமிடம் கூட அமைதியாய் அமர முடியவில்லை என்கின்றனர். உண்மையில் ஒரு மனிதனின் தோற்றம், பேச்சு, முகம், அவன் நடக்கும், அமரும் விதம் இவை அவனது மனநிலையினை நன்கு வெளிப்படுத்தும். ஆக மனநிலையினை சீராக வைத்துக் கொண்டால் ஒரு மனிதன் உடல்நிலை, மனநிலையில் நன்கு இருப்பார்.
அடுத்து தியானத்திற்கான சில அடிப்படை முறைகளை பார்ப்போம். உடலை விட மனம் தியானத்திற்கு மிக முக்கியமாகிறது. ஆனால் தியானம் செய்ய உடலை சரியான ஆசன முறை கொண்டு ஆடாது இருக்கும்படியான நிலையில் அமர வேண்டும். பொதுவில் பத்மாசனம் நிலை உடலை அசங்காது வைக்கும். முதுகு நிமிர்ந்து மென்மையாக கண்களை மூடி அமரலாம். பொதுவில் சின் முத்திரையினை பரிந்துரைப்பர். உடலினை இலகாக தளர்த்தி உடலுக்கு ஆற்றல் சக்தி கூட்டப்படுகின்றது. இதனை யோகா வகுப்புகளில் நன்கு சொல்லி கொடுக்கின்றனர். ஐம்புலன்கள் மீதும் மனதின் ஆதிக்கம் தலை விரித்து ஆடக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரி முறைகளை முதல் படியாக கற்பிக்கின்றனர்.
அமைதியாய் சில நிமிடங்கள் எதனையும் நினைக்காது இருக்க கற்றோம். மூச்சை கவனித்து எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த கற்றோம். அதேபோல் அசையாது உடலை தளர்த்தி அவரவர் வயதுக்கு ஏற்ப உடல்நிலைக்கேற்ப சில நிமிடங்கள் இருக்கவும். இப்போது கற்போம்.
-தொடரும்