செய்திகள்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: இந்திய அணி, அயர்லாந்துடன் இன்று மோதல்

Published On 2017-02-10 04:07 GMT   |   Update On 2017-02-10 04:07 GMT
இன்று நடக்கும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் மோதுகிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கொழும்பு :

11-வது பெண்கள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்று விட்டன.

எஞ்சிய 4 அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் பெண்கள் உலக கோப்பை ஒருநாள் தகுதி சுற்று கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.

இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக போட்டிக்கு தகுதி பெறும். நேற்று ஓய்வு நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

இலங்கை, தாய்லாந்து அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்த இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. மற்ற லீக் ஆட்டங்களில் தாய்லாந்து-ஜிம்பாப்வே (ஏ பிரிவு), பாகிஸ்தான்-பப்புவா நியூ கினியா, வங்காளதேசம்-ஸ்காட்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன.

Similar News