செய்திகள்

உலக அழகி மனுஷி சில்லருக்கு விருது வழங்கிய விராட் கோலி

Published On 2017-12-01 11:15 GMT   |   Update On 2017-12-01 11:15 GMT
உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மனுஷி சில்லருக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விருது வழங்கி சிறப்பித்தார்.
புதுடெல்லி:

சீனாவின் சான்யா நகரில் நடந்த 2017ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டர். இதனையடுத்து அவரை கவுரவிக்கும் விதமாக டெல்லியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலக அழகி மனுஷி சில்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விருது வழங்கி சிறப்பித்தார். கோலியிடம் விருது பெற்ற மனுஷி அவரிடம் சில கேள்விகளை கேட்டார்.



உலக அரங்கில் விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நீங்கள் சமுதாயத்திற்கு நிறைய செய்துள்ளீர்கள். உங்களை இன்று ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். இளைஞர்கள் உங்களை ரோல் மாடலாக கருதுகின்றனர். அவர்களுக்கு என்ன சொல்ல விருப்புகிறீர்கள். குறிப்பாக கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என மனுஷி கேட்டார்.

அதற்கு பதிலளித்த விராட் கோலி, நாம் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதை எப்போது செய்ய வேண்டும் என உணர்ந்து செயல்படவேண்டும். ஒரு விஷயத்தை செய்யும்போது மனப்பூர்வமாக செய்யவேண்டும். நான் எப்போதும் மற்றவர்களை போல் இருக்க நினைத்ததில்லை. நான் நானாகாவே இருக்கிறேன்.

உங்களுக்கு முன்னுதாரணமாக சிலர் இருக்கலாம், நீங்கள் அவரை பின்பற்றலாம். ஆனால் அவரைப் போலவே நடந்துகொள்ள கூடாது. நீங்கள் நீங்களாக மட்டும் இருங்கள். எதற்காகவும் உங்கள் தனித்திறனை மாற்றிக்கொள்ளக்கூடாது, நீங்கள் நீங்களாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். மற்றவர்களை போல் நீங்கள் இருக்க விரும்பினால் உங்களால் வெற்றி பெற முடியாது என பதிலளித்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன் அளித்த பேட்டியில் மனுஷி தனக்கு பிடித்த வீரர் விராட் கோலி எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News