சாம்பியன்ஸ் டிராபி: டக்கெட் சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
- இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது.
- இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் அடித்தார்.
லாகூர்:
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டக்கெட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் பில் சால்ட் 10 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 15 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். டக்கெட் - ரூட் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.
நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரூட் அரைசதம் அடித்த நிலையில் 68 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த ஹாரி புரூக் 3 ரன், பட்லர் 23 ரன், லிவிங்ஸ்டன் 14 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டக்கெட் சதம் அடித்து அசத்தினார்.
நிலைத்து நின்று ஆடிய டக்கெட் 165 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.