கிரிக்கெட் (Cricket)

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்படும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி

Published On 2025-02-22 18:12 IST   |   Update On 2025-02-22 18:12:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
  • இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News