2000-ல் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? நாளை இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதல்
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை மோதுகின்றன.
- இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது ஒருநாள் போட்டியாகும்.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலமுறை மோதியிருக்கின்றன.
1975-ம் ஆண்டு முதல் நடந்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 10 முறை கோதாவில் குதித்துள்ளன. இதில் இரு அணியும் தலா 5-ல் வெற்றி கண்டு இருக்கின்றன. இவற்றில் இரண்டு நாக்-அவுட் ஆட்டங்களும் அடங்கும்.
2019-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த அரைஇறுதியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை கூட எடுக்க முடியாமல் இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோற்றது. முன்னாள் கேப்டன் தோனி அரைசதம் (50 ரன்) அடித்தார். இது தான் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
இதற்கு 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில் மும்பை வான்கடேயில் நடந்த அரையிறுதியில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை 'நாக்-அவுட்' சுற்றில் ஒரு அணி எடுத்த மெகா ஸ்கோர் இது தான். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்னில் அடங்கியது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. 2000-ம் ஆண்டு நைரோபியில் நடந்த இறுதி சுற்றில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சவுரவ் கங்குலி சதமும் (117 ரன்), சச்சின் டெண்டுல்கர் அரைசதமும் (69 ரன்) அடித்தனர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 132 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய போது, ஆபத்பாந்தவனாக வந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ் சதம் (102 ரன்) விளாசி தங்கள் அணிக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நியூசிலாந்து 49.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நாள் வரைக்கும் 50 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வென்ற ஒரே ஐ.சி.சி. கோப்பை இதுதான்.
2-வது முறையாக தற்போதைய சாம்பியன்ஸ் கோப்பை லீக்கில் எதிர்கொண்டது. இதில் நியூசிலாந்தை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார்.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் மோதியதில் 6-ல் நியூசிலாந்தும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.
இதில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்ததும் அடங்கும்.
குறுகிய வடிவிலான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 முறை பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. மூன்றிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
2007-ம் ஆண்டு சூப்பர்8 சுற்றில் இந்தியா 10 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. என்றாலும் அந்த உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி வரலாறு படைத்தது.
2016-ம் ஆண்டில் சூப்பர் 10 சுற்றில் இந்தியா 79 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. 2021-ம் ஆண்டில் துபாயில் நடந்த சூப்பர்12 சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்ததுடன் அரைஇறுதி வாய்ப்பையும் இழந்தது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை மோதுகின்றன. 2000-ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 119 ஆட்டங்களில் இந்தியா 61-ல் நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தது. 7 ஆட்டம் முடிவு இல்லை.