கிரிக்கெட் (Cricket)
null

மகளிர் பிரீமியர் லீக்: உபி வாரியர்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்

Published On 2025-03-03 22:48 IST   |   Update On 2025-03-03 23:14:00 IST
  • குஜராத் அணியில் மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
  • உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

லக்னோ:

5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இதையடுத்து, இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். தயாளன் ஹேமலதா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் களமிறங்கியது.

இதில் கிரண் நவ்கிரே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா வோல்வும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 105 ரன்களில் ஆல் அவுட்டானது. குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காஷ்வி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டியான்டிரா டோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் குஜராத் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து.

Tags:    

Similar News