அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்.. ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை சுட்டிக்காட்டிய கவாஸ்கர்
- ஆஸ்திரேலியாவில் வலுவான ஸ்பின் அட்டாக் இருப்பதாக தெரியவில்லை.
- ஆஸ்திரேலியா சேசிங் செய்வதை விட இந்தியா சேஸ் செய்வது வெற்றியைப் பெறுவதற்கான விஷயமாகும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிந்துள்ளன. அதில் இந்தியா தங்களது 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. அதைத் தொடர்ந்து நாளை துபாயில் நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வலுவான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா தோற்கடித்தது. எனவே இம்முறையும் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.
இந்நிலையில் துபாய் மைதானம் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா தவிர்த்து தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த பிட்ச்சில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வலுவான ஸ்பின் அட்டாக் இருப்பதாக தெரியவில்லை. அது போக ஜோஸ் ஹசில்வுட், மிட்சேல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகிய முக்கிய வீரர்களையும் அவர்கள் தவற விட்டுள்ளனர்.
அவர்களுடைய பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியா சேசிங் செய்வதை விட இந்தியா சேஸ் செய்வது வெற்றியைப் பெறுவதற்கான விஷயமாகும். நியூசிலாந்துக்கு எதிரான கடந்தப் போட்டியில் ஆரம்பக்கட்ட ஓவர்களில் துபாய் பிட்ச்சில் நமது ஸ்பின்னர்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல அது நன்றாக மாறியது
ரோலிங் செய்த பின் பனி ஓய்ந்த பின் ஸ்பின்னர்களுக்கு நிறையப் பிடிப்பு கிடைத்தது. ஆனால் அதற்காக துபாய் பிட்ச்சில் பேட்டிங் செய்வது அசாத்தியம் என்று அர்த்தமல்ல. கொஞ்சம் சுழல் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திய நமது ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதை அசாத்தியமாக மாற்றினர்.
என்று கவாஸ்கர் கூறினார்.