ஐ.பி.எல்.(IPL)

கடைசி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே சேர்த்த கே.கே.ஆர்.: ஆர்சிபிக்கு 175 ரன் இலக்கு

Published On 2025-03-22 21:22 IST   |   Update On 2025-03-22 21:22:00 IST
  • ரகானே அரைசதம் விளாசினர்.
  • குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.

ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.

4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் கொல்கத்தா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.

9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். ரகானே விக்கெட் இழந்த பின்னர் கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரகுவன்ஷி ஒரு பக்கம் விக்கெட்டை காப்பாற்ற மறுமுனையில் வெங்கடேஷ் அய்யர் 7 பந்தில் 6 ரன்கள் எடுத்தும், ரிங்கு சிங் 10 பந்தில் 12 ரன்கள் எடுத்தும், ரசல் 3 பந்தில் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா 15.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களே எடுத்திருந்தது.

7-வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஓவர் (டெத் ஓவர்) என அழைக்கப்படும் கடைசி 4 ஓவரில் அதிரடியாக ஆட கொல்கத்தா அணியில் வீரர்கள் இல்லாமல் போனது.

லிவிங்ஸ்டன் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 4 ரன்களே கிடைத்தது. 18-வது ஓவரை ஹெசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ரகுவன்ஷி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் 10 ரன்கள் கிடைத்தது.

19-வது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். அவர் 22 பநதில் 30 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க 4 ரன்கள்தான் கிடைத்தது.

கடைசி ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 174 ரன்கள் அடித்துள்ளது. கடைசி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடித்தது.

ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். குருணால் பாண்ட்யா 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யாஷ் தயால், ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி விளையாடி வருகிறது.

Tags:    

Similar News