ரச்சின் ரவீந்திரா அசத்தல் சதம்: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து
- ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் விளாசினார்.
- ஐசிசி தொடரில் ரச்சின் ரவீந்திராவின் 4-வது சதம் இதுவாகும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷான்டோ உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 14 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஷான்டோ சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதற்கிடையே தவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 2 ரன்னிலும், மெஹ்முதுல்லா 4 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் 118 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான்டோ உடன் ஜாகர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஷோடி தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேசம் 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ஜாகர் அலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷாத் ஹொசைன் 25 பந்தில் 26 ரன்கள் அடித்தார். ஜாகர அலி இறுதி வரை போராடி 55 பந்தில் 45 ரன்கள் அடிக்க, வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஓ'ரூர்கே 10 ஓவரில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வில் யங் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இவர் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் அவுட் ஆனார்.
3-வது விக்கெட்டுக்கு டேவன் கான்வே உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 72 ரன்னாக இருக்கும்போது கான்வே 45 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்ச்சி நிலைத்து நின்று விளையாடியது. ரச்சின் ரவீந்திரா 50 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பிறகு ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.
இதனால் 95 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் விளாசினார். ஐசிசி தொடரில் இவரின் 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 105 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 38.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கிளென் பிலிப்ஸ் களம் இறங்கினார்.
மறுமுனையில் விளையாடிய டாம் லாதம் 71 பந்தில் 3 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். டாம் லாதம் 55 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார். அப்போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.
6-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ் உடன் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.