ரோகித் பாணியில் அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம்- பட்லர் நம்பிக்கை
- அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு இந்திய அணியை ரோகித் எடுத்து வந்துள்ளார்.
- நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம்.
இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறை மிகவும் சரியானது என்றும் அந்த அணுகுமுறையை நாங்களும் பின்பற்றி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த உலகக் கோப்பையை திரும்பிப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் அதிரடியாக விளையாடிய 2 அணிகள் தான் இறுதிபோட்டியில் விளையாடின. டிராவிஸ் ஹெட் இறுதிபோட்டியில் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே அவர்களுக்கு வெற்றியும் கிடைத்ததை உங்களால் பார்க்க முடிந்தது.
அதே போல இறுதிபோட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா கேப்டனாக அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு தள்ளியதற்காக பாராட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு அவர் இந்திய அணியை எடுத்து வந்துள்ளார். எனவே நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம். அதற்கு எதிரணியை பேட்டிங்கில் அழுத்தத்தின் கீழ் தள்ளுவதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும். அதே போல விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.
எதிரணி வீரர்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அவர்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்துவார்கள். எனவே நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிய முயற்சிப்போம். இவை அனைத்தும் திட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். அதை செயல்படுத்தி நன்றாக விளையாடினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
என்று பட்லர் கூறினார்.