இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- அதிக ரன்கள் எடுத்ததற்காக மந்தனாவும் விருது பெற்றார்.
- இரு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ.-இன் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆண்கள் பிரிவில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (ஆண்கள்) பாலி உம்ரிகர் விருதை ஜஸ்பிரித் பும்ராவும், பெண்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனாவும் வென்றனர். 2023-24 காலக்கட்டத்தில் பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்ததற்காக மந்தனாவும் விருது பெற்றார்.
இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே. நாயுடு நினைவாக 1994-இல் நிறுவப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற 31வது வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
இவரது 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகள் விளையாட்டு வரலாற்றில் எந்தவொரு வீரருக்கும் அதிகபட்சமாகும். அதே போல் இருவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவரது ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் 15,921 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 18,426 ஆகும்.
இவர் மட்டுமின்றி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஷ்வினக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த சர்வதேச அறிமுகம் (ஆண்கள்) பிரிவில் சர்பராஸ் கானுக்கும் பெண்கள் பிரிவில் ஆஷா ஷோபனாவுக்கும் விருது வழங்கப்பட்டது.
கடந்த 2023-24 ஆண்டு அதிக விக்கெட் எடுத்த தீப்தி சர்மாவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.