ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் 82 ரன்களில் ஆல் அவுட் ஆன தெ.ஆ. அணி
- இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- தென் ஆப்பிரிக்கா அணியின் 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இறுதிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கோப்பை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் ஜூனியர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு சிமோன் லௌரென்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இவருடன் களமிறங்கிய துவக்க வீராங்கனை ஜெம்மா 16 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்போ மெசோ (10), வேன் வூர்ஸ்ட் (23) மற்றும் ஃபே கௌலிங் (15) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும், நான்கு பேர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கொங்கடி திரிஷா 3 விக்கெட்டுகளையும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா மற்றும் பருனிகா சிசோடியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷப்னம் ஷாகில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.