கிரிக்கெட் (Cricket)

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்க அணியுடன் இன்று பலப்பரீட்சை

Published On 2025-02-02 08:34 IST   |   Update On 2025-02-02 08:34:00 IST
  • இந்தியா மீண்டும் பட்டம் வெல்லுமா?
  • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கோலாலம்பூர்:

2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.

இதில் கோலாலம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை (பகல் 12 மணி) சந்திக்கிறது.

நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கையையும், சூப்பர் 6 சுற்றில் வங்காளதேசம், ஸ்காட்லாந்தையும் பந்தாடிய இந்திய அணி அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணியில் பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள கோங்காடி திரிஷா (265 ரன்), கமலினி (135) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் அதிக விக்கெட் வீழ்த்தி முறையே முதல் 2 இடம் வகிக்கும் வைஷ்ணவி ஷர்மா (15 விக்கெட்), ஆயுஷி சுக்லா (12), பருனிகா சிசோடியா, ஜோஷிதா, ஷப்னம் ஷகீல் கலக்குகிறார்கள்.

கைலா ரெனேக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, சமோவ், நைஜீரியாவை தொடர்ச்சியாக வீழ்த்தியது. சூப்பர்6 சுற்றில் அயர்லாந்தை வென்றது.

அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஜெம்மா போத்தா, சிமோன் லாரன்ஸ்சும், பந்து வீச்சில் கைலா ரெனேக், மோனலிசா லிகோடி, ஆஷ்லே வான் விக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ள தனது முழு திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக மகுடம் சூட மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் வலுவான இந்திய அணியே மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News