சர்பராஸ் கான் இடம் கே.எல். ராகுலுக்கு செல்லும்: ஸ்ரீகாந்த்
- சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.
- சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. வருகிற 19-ந்தேதி இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் ஜூரெல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வங்கதேச அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் இடம் பிடித்துள்ளார். இவர் சர்பராஸ் கானுக்கு பதிலாக களம் இறக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறுகையில் "உண்மையிலேயே, சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.
ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியதால் ஜூரெல் அணியில் இருந்து வெளியேறுவதை பார்க்க முடியும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களை நீங்கள் மனதில் வைத்து பார்க்கும், கே.எல். ராகுல் அங்கே இருப்பார். ஆஸ்திரேலியாவில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடியுள்ளார்" என்றார்.
சர்பராஸ் கான் இந்திய அணிக்காக ஐந்து இன்னிங்சில் போட்டிங் செய்து 200 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 50 ஆகும். ஸ்டிரைக் ரேட் 79.36 வைத்துள்ளார்.