செஞ்சதெல்லாம் போதும் சிவாஜி.. Retire ஆகிடு.. ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள்
- ரோகித் சர்மா கேப்டன்ஷிப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
- ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் அவரது பேட்டிங் சொல்லும்படி இல்லை.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
105 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து இருந்தது. லயன் 41 ரன்னிலும், போலண்டு 10 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 333 ரன்கள் முன்னிலை, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. ஆஸ்திரேலியா மேலும் 6 ரன் எடுப்பதற்குள் கடைசி விக்கெட்டான லயன் 41 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். அந்த அணி 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது.
பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள்.
இந்நிலையில் ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வரை அவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அதன் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முதல் முறையாக இழந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முறையே தடுமாறி வருகிறது.
இதனால் அவரது கேப்டன்ஷிப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. முதல் டெஸ்ட்டில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு பெரிய அளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்து சாதனை படைத்திருந்தார். அவரையே முழு நேர கேப்டனாக நியமிக்கும்படி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் அவரது பேட்டிங் சொல்லும்படி இல்லை. அவரது கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே
6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார். மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சராசரி 10.93 ஆகும்.
பார்டர் கவாஸ்கர் டிராபில் 10 ரன்களே அதிகபட்ச ரன் ஆகும். இன்று வெற்றி பெற வேண்டிய நிலையில் ரோகித் சர்மா மீண்டும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் அவரை ஓய்வை அறிவிக்கும் படி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ரோகித் ரசிகர்களே அவரை செஞ்சதெல்லாம் போதும் நீங்களே ஓய்வை அறிவிப்பது பெருந்தன்மையாக இருக்கும் என கூறி வருகின்றனர்.