ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: ரோகித் விளையாடமாட்டார்? வைரலான புகைப்படம்
- கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய அணி வீரர்கள் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது கேப்டன் ரோகித் சர்மா அதில் கலந்து கொள்ளவில்லை.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது கேப்டன் ரோகித் சர்மா அதில் கலந்து கொள்ளவில்லை.
வேகப்பந்து ஸ்லிப் கேட்ச் பயிற்சியின் போது முதல் ஸ்லிபில் விராட் கோலி அடுத்து கேஎல் ராகுல் அதனை தொடர்ந்து நிதிஷ் ரெட்டி ஆகியோர் கேட்ச் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் சுழற்பந்து வீச்சுக்கான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் சுப்மன் கில் ஈடுபட்டார். ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். பெஞ்சில் இருக்கும் வீரர் கூட பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனால் ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது. கடைசி டெஸ்ட்டில் கேப்டனாக பும்ரா செயல்படவும் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த பயிற்சி புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.
முன்னதாக அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிட்ச்சை பார்த்த பிறகு தான் ஆடும் லெவனை அறிவிப்போம் என கூறியது குறிப்பிடத்தக்கது.