கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபியிலும் இப்படியே நடந்தால் பயிற்சியாளராக நீடிக்க முடியாது- பிசிசிஐ நிர்வாகி அதிர்ச்சி தகவல்

Published On 2025-01-02 05:12 GMT   |   Update On 2025-01-02 05:12 GMT
  • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ.யின் முதல் தேர்வாக காம்பீர் கிடையாது.
  • ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கிறது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 9-ந் தேதி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.

காம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. தற்போது ஆஸ்திரேலியாவில் 5 போட்டிக் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இதற்கிடையே இந்திய வீரர்கள் பேட்டிங் மோசமாக இருப்பதால் ஆஸ்திரேலிய பயணத்துக்கு புஜாரா வேண்டும் என்று காம்பீர் விருப்பம் தெரிவித்தார். அவரது வேண்டுகோளை தேர்வு குழுவினர் நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீர் முதல் தேர்வாக இருந்தது கிடையாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகி ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ.யின் முதல் தேர்வாக காம்பீர் (முதல் தேர்வு வி.வி.எஸ்.லட்சுமண்) கிடை யாது. நன்கு அறியப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த சிலர் 3 வடிவிலான போட்டிகளிலும் பயிற்சியாளராக விரும்பவில்லை. இதனால் அவர் ஒரு சமரசம் செய்தார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் வேறு சில நிர்பந்தகளும் இருந்தன.

ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கிறது. இதில் காம்பீரின் செயல் திறன் மேம்படவில்லையென்றால் அவரது பயிற்சியாளர் பதவிக்கு பாதுகாப்பு இல்லை.

இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

இதற்கிடையே மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்கு பிறகு வீரர்கள் அறையில் காம்பீர் சத்தம் போட்டதாகவும், இதனால் அவருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அணியில் பிளவு இருப்பதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.

இதை காம்பீர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'வீரர்கள் அறையில் நடக்கும் விவாதங்கள் பொதுவெளியில் வரக்கூடாது. வீரர்களுடன் நேர்மையான உரையாடல்கள் நடைபெற்றது. கடுமையான வார்த்தைகள் என்ற தகவல் தவறானது' என்றார்.

Tags:    

Similar News