குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய உரிமையாளர்?
- ஐபிஎல் 2025 தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது.
- நிர்வாக குழு ஒப்புதல் வழங்கவில்லை.
அகமதாபாத்-ஐ சேர்ந்த டொரன்ட் குழுமம் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் பெரும்பாலான பங்குகளை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்ற குஜராத் அணியில் டொரண்ட் குழுமம் 67 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கேபிட்டல் பார்ட்னர்ஸ் வசம் உள்ள பங்குகளை டொரன்ட் குழுமம் வாங்கும் என்று தெரிகிறது. 2021-ம் ஆண்டு கேபிட்டல் பார்ட்னஸ் குழுமம் குஜராத் அணியில் பெரும்பாலான பங்குகளை விலைக்கு வாங்கியிருந்தது. இந்த நிலையில், கேபிட்டல் பார்ட்னர்ஸ் மற்றும் டொரண்ட் குழுமம் இடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதற்கான விலை குறித்து எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக இரு நிறுவனங்கள் இடையே மேற்கொள்ளப்பட வேண்டிய ஆவணம் சார்ந்த பணிகளை ஐ.பி.எல். மேற்கொண்டு வருகிறது. இதுதவிர ஐ.பி.எல். தொடரின் நிர்வாக குழு இதற்கு இன்னமும் இறுதி ஒப்புதலை வழங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் தொடங்கும் 2025 சீசன் முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய உரிமையாளராக டொரண்ட் குழுமம் உருவெடுக்கும். முன்னதாக குஜராத் அணியை விலைக்கு வாங்க கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 625 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.