களத்தில் பீல்டராக களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்- காரணம் இதுதான்
- தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகின்றனர்.
- முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
லாகூர்:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் லாகூரில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும் போது தென் ஆப்பிரிக்க அணியின் பீல்டிங் பயிற்சியாளரான வாண்டில் குவாவு மாற்று பீல்டராக களமிறங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கான காரணம் என்னவெனில், தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடர் நடைபெற்றதால் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதன் காரணமாகவே இந்த ஆட்டத்தில் பீல்டிங் பயிற்சியாளரே மாற்று பீல்டராக களத்திற்குள் வந்துள்ளார்.