சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராய்ப்பூர்:
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கைபந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ராம்தின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரையன் லாரா 41 ரன்னும், சாட்விக் வால்டன் 31 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டும், டுவெயின் ஸ்மித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதி ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.