முதலமைச்சர் கோப்பை விளையாட்டு- சென்னை அணி 100 தங்கத்தை தாண்டியது
- சென்னை அணிக்கு மேலும் 10 தங்கம் உள்பட 18 பதக்கம் கிடைத்தது.
- 33 மாவட்ட அணிகள் தங்கம் வென்றுள்ளன.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகையான பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து 33 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டித் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மாவட்ட அணி நேற்று 100 தங்கப் பதக்கத்தை தாண்டியது. கல்லூரி மாணவர்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் சென்னை மாணவர் அன்பு கதிர் தங்கமும், 200 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவில் சென்னையை சேர்ந்த நித்திக் நாதெள்ளா தங்கமும் வென்றனர்.
கல்லூரி கைப்பந்து ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவிலும் செங்கல்பட்டு அணி தங்கப் பதக்கம் பெற்றது கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கியில் ஈரோடு அணி முதல் இடத்தை பிடித்தது.
நேற்றைய 20-வது நாளில் சென்னை அணிக்கு மேலும் 10 தங்கம் உள்பட 18 பதக்கம் கிடைத்தது. சென்னை மாவட்ட அணி 101 தங்கம், 74 வெள்ளி, 69 வெண்கலம் ஆக மொத்தம் 244 பதக்கத்துடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
செங்கல்பட்டு அணி 29 தங்கம் உள்பட 83 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், கோவை 23 தங்கம் உள்பட 100பதக்கத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன. 33 மாவட்ட அணிகள் தங்கம் வென்றுள்ளன.