தங்கம் வென்ற குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
- விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம்.
சென்னை:
அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஜராத்தி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2022) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, விளையாடாத கேப்டன் ஸ்ரீநாத் ஆகியோர் சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மற்றும் ஸ்ரீநாத் ஆகிய 3 பேரும் அங்கேரியில் இருந்து ஜெர் மனி வழியாக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை வந்தனர்.
டி.குகேஷ் இன்று காலை 8.25 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்கப்பட்டனர். செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவர்களை ஊக்குவித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் சுஜாதா, தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி, பொருளாளர் ஆர்.சீனிவாசன், வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்க பொதுச் செயலாளர் ஐ.ஐயப்பன் உள்பட பலர் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
வைஷாலி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், வெண்கல பதக்கம் வென்று இருந்தோம், அப்போது தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது தங்கப்பதக்கம் வென்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஓபன் பிரிவில் அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெண்கள் அணி, ஒரு சுற்றில் தோல்வியடைந்து, மற்ற 2 ரவுண்டுகளை வென்று ஆக வேண்டிய நேரத்தில், இரண்டு சுற்றும் வெற்றி பெற்று, பதக்கத்தை வென்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரக்ஞானந்தா கூறியதாவது:-
கடந்த முறை மிகவும் நெருக்கத்தில் வந்து தங்கப் பதக்கத்தை தவறவிட்டோம், இந்த முறை அதிக புள்ளிகள் உடன் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விளையாடிய அனைத்து சுற்றுகளும் கடுமையாகவே இருந்தது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தோற்கடித்ததும் தங்கப் பதக்கம் உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.