2024-ம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா தேர்வு
- பாகிஸ்தானின் நதீம் 2024-ல் ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர ஒரே ஒரு நிகழ்வில் போட்டியிட்டதால் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
- 2024 தரவரிசையில் இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை விஞ்சி நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2024-ம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான டிராக் அண்ட் ஃபீல்ட் நியூஸ் தேர்வு செய்துள்ளது.
27 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்திற்காக பாகிஸ்தானின் அர்ஷத் நதீமிடம் தோற்கடிக்கப்பட்டார்.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பத்திரிகை வெளியிட்ட 2024 தரவரிசையில் இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை விஞ்சி நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்தார். நதீம் 2024-ல் ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர ஒரே ஒரு நிகழ்வில் போட்டியிட்டதால் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
1948-ல் நிறுவப்பட்ட டிராக் அண்ட் ஃபீல்ட் நியூஸ், தன்னை விளையாட்டுத்துறையின் பைபிள் என்று கூறிக்கொள்ளும் இதழ், ஒவ்வொரு ஆண்டும் உலக மற்றும் அமெரிக்க தரவரிசைகளை வெளியிடுகிறது. இந்த இதழ் உலகளாவிய டிராக் அண்ட் ஃபீல்ட் வட்டாரங்களில் ஒரு அதிகாரமாக கருதப்படுகிறது.
நீரஜ் சோப்ரா 2023-ம் ஆண்டின் ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அவர் 2024-ல் எந்த டயமண்ட் லீக் நிகழ்வையும் வெல்லவில்லை, தோஹா, லொசேன் மற்றும் பிரஸ்ஸல்ஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கடந்த ஆண்டு ஃபின்லாந்தின் துர்குவில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற ஒரே பெரிய வெற்றியாகும்.