பாரிஸ் ஒலிம்பிக் 2024

2024ல் தோல்வி... 2028 ஒலிம்பிக்கில் பிவி சிந்து விளையாடுவாரா?

Published On 2024-08-03 05:34 GMT   |   Update On 2024-08-03 05:34 GMT
  • 1992 ஆம் ஆண்டு பாரிசிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதல்முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டது.
  • இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை பேட்மிண்டனில் வென்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியில், 21-19, 21-14 என்ற செட் கணக்கில், சிந்துவை வீழ்த்தி ஜியாவோ வெற்றி பெற்றார். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் வென்ற பிவி சிந்து இந்த முறை பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழக்கும் வகையில் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போட்டிக்கு பின்னர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பி.வி.சிந்து, "அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. நான் திரும்பிச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன். ஓய்வுக்கு பிறகு அது என்னவென்று பார்ப்பேன்" என்று கூறினார்.

1992 ஆம் ஆண்டு பாரிசிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதல்முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை பேட்மிண்டனில் வென்றுள்ளது. இதில் பிவி சிந்து (ரியோ 2016-இல் வெள்ளி, டோக்கியோ 2020-இல் வெண்கலம்) மற்றும் சாய்னா நேவால் (லண்டன் 2012-இல் வெண்கலம்) வென்றுள்ளனர்.

Tags:    

Similar News