அர்ஷத்தை மகன் என்று சொன்ன தாய் - சிலருக்கு வினோதமாக இருக்கலாம்.. ஆனால்! நீரஜ் சோப்ரா ரியாக்ஷன்
- 'அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர்'
- 'தனது தாய், அர்ஷத் குறித்து கூறியது பற்றி நீரஜ் சோப்ரா மனம் திறந்துள்ளார்'
பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று முன் தினம் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான் என்று தெரிவித்திருந்தார்
பாஸ்கிதானும் இந்தியாவும் எதிரிகள் என்ற பொதுப்படையாக இந்தியர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் மனநிலையில் இருந்து விலகி நீரஜின் தாய் கூறியிருந்த இந்த கருத்து அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் தனது தாய் அர்ஷத் குறித்து கூறியது பற்றி நீரஜ் சோப்ரா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பாரீசில் வைத்து செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், எனது தாய் கிராமத்தில் வாழ்கிறார், தொலைக்காட்சிகளோ, சமூக வலைதளமோ, செய்திகளோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத பின்புலம் கொண்ட கிராமம் அது.
[பொதுவெளியில் இருக்கும்] இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் குறித்து அவருக்கு தெரியாது. அவர் ஒரு தாயாக மட்டுமே தன்னை உணர்கிறார். எனவே தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாக அவர் பேசியுள்ளார். தாயின் ஸ்தானத்தில் இருந்து அவர் இதைப் பேசினார். இது சிலருக்கு விநோதமாகத் தோன்றலாம். சிலர் இதை விரும்பியும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்தில் உள்ள கந்த்ரா[ Khandra] கிராமத்தைச் சேர்த்தவர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அர்ஷத் நாதீமின் தாயும் நீரஜ் சோப்ராவும் தனது மகன் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.