விளையாட்டு

ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகள்: 12 பேர் பதக்கங்களை வென்றனர்

Published On 2023-10-04 06:54 GMT   |   Update On 2023-10-04 06:54 GMT
  • 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
  • டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

சென்னை:

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 43 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக வீரர், வீராங்கனைகள் ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்து வருகின்றனர். இதுவரை 12 பேர் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

நேற்று நடந்த தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வித்யா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் பெற்றார். 22 வயதான அவர் திருவாரூர் மாவட்டம், செட்டிசத்திரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் 55.68 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 25 வயதான அவர் கோவையை சேர்ந்தவர் ஆவார்.

டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பள்ளிகல் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் குமார் இடம் பெற்றிருந்தார்.

இதேபோல 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி, கஸ்தூரி ராஜ் மற்றும் கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றனர்.

துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்கள் டிராப் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்த அணியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிருதிவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றார்.

தடகள போட்டியின் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா, ராஜேஷ் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர்.

Tags:    

Similar News