கரூரில் கலெக்டர் அலுவலக லிப்ட் பழுதானதால் பரபரப்பு- உள்ளே சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்பு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் முடிவடைந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழா நிறைவடைந்ததும் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். பயனாளிகள் உள்ளிட்டோர் விழா நடைபெற்ற இரண்டாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் கீழே இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் இந்த லிப்டில் 6 பெண்கள் உள்பட 10 பேர் ஏறினர். இரண்டாவது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வந்த லிப்ட் வேகமாக நின்றது. இதையடுத்து கதவை திறக்க முற்பட்டபோது அதனை திறக்கமுடியவில்லை.
லிப்டுக்குள் இருந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதும் லிப்ட் பழுதாகி செயலிழந்து போய் இருந்தது. நிமிடங்கள் செல்லச் செல்ல உள்ளே சிக்கியிருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர். உடனடியாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் திரண்டு வந்து லிப்டை திறக்க போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.
இதற்கிடையே லிப்டுக்குள் இருந்தவர்கள் தங்களுக்கு மூச்சுத்திணறுவதாக கூறினர். வெளியே நின்றிருந்தவர்கள் அவர்களிடம் ஆறுதல் வார்த்தைகளை கூறி ஆசுவாசப்படுத்தினர்.
இதற்கிடையே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கையாக லிப்ட் கதவை உடைத்து உள்ளே இருந்த 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதில் சிக்கியிருந்தவர்கள் வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இதற்கிடையே லிப்டில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் 108 ஆம்புலன்சு மூலம் அந்த மூதாட்டி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறிது ஓய்வுக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.