தமிழ்நாடு

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை- மாநகராட்சி தீவிரம்

Published On 2024-05-19 07:15 GMT   |   Update On 2024-05-19 07:15 GMT
  • இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே நாயை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
  • பல இடங்களில் நாய் தொல்லை அதிகமாக உள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் தெரு நாய்கள் தொல்லை மீண்டும் அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே நாயை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

வாகனங்களில் வேகமாக செல்லும்போது நாய் துரத்துவதால் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செல்பவர்கள் இரவு நேரம் வேலை முடிந்து விடு திரும்புவோர், ரெயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர்கள், முதியோர் என தெரு நாய்கள் பயமுறுத்தாதவர்கள் யாருமே இல்லை.

தெருநாய் தொல்லைக்கு புகார் அளிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 1913 என்ற உதவி எண் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.


சென்னையில் சூளைமேடு, ராயப்பேட்டை, மடிப்பாக்கம், மேடவாக்கம், குரோம்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, வில்லிவாக்கம், என பல இடங்களில் நாய் தொல்லை அதிகமாக உள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

சட்ட சிக்கல் காரணமாக தெரு நாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. நாய்களை கொல்லக் கூடாது. கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

அதே போல் பிறந்து 7 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள நாயை கருத்தடை செய்யக்கூடாது என்றும் சட்ட விதிகள் உள்ளது.

நாயை கொன்றால் 5 ஆண்டு சிறை தண்டனை என்றும் சட்டம் சொல்கிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் நாய்களை பிடித்து கருத்தடை செய்து வைக்கிறோம். இந்த ஆண்டு 10 ஆயிரம் நாய்கள் வரை பிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. நாய்களை கட்டுப்படுத்த எல்லோரது ஒத்துழைப்பும் தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News