தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை... சட்டசபையில் புதிய மசோதா நிறைவேற்றம்: திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
- அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை என அமைச்சர் பேச்சு
- சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
சென்னை:
தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்டசபையில் இன்று சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்படும், அதற்கு உரிய சம்பளம் வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் மசோதாவை தாக்கல் செய்து பேசும்போது, 8 மணி நேர வேலை, வார விடுமுறை, கூடுதல் ஊதியம் என்ற ஷரத்துகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். தொழிற்சாலை நெகிழ்வுத்தன்மைக்காகவே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் அதற்கு எதிராக அரசு இருக்காது, அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை, தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
8 மணி நேரம் என்பதை இந்த சட்ட மசோதா நீர்த்துப்போகச் செய்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்தார். மசோதா மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பேசினார்.
சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த வேலை நேர சீர்திருத்த மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கோரிக்கை விடுத்தார்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.