பொது போக்குவரத்து தடையால் ராமேசுவரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 1,200 பக்தர்கள் தவிப்பு
- ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.
ராமேசுவரம்:
பிரதமர் மோடி 2 நாள் ஆன்மீக பயணமாக இன்று பிற்பகல் ராமேசுவரம் வருகை தருகிறார். இதையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமேசுவரத்தில் அனைத்து விதமான போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் ராமேசுவரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. 3,400 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த 1,200 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து பேருந்துகளில் ராமேசுவரம் வந்தனர்.
இன்று அவர்கள் மீண்டும் மதுரைக்கு திரும்பவேண்டிய நிலையில், பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தவித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.
பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தபிறகு மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநில பக்தர்கள் பத்திரமாக மதுரைக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுற்றுலா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.