சென்னையில் ஒரே நாளில் 14 ரவுடிகள் கைது- 764 ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று போலீசார் எச்சரிக்கை
- சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
- சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சென்னையை குற்றம் இல்லாத நகரமாக மாற்றவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சென்னையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பல குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றசெயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்கள், கொலை, கொலைமுயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஒரே நாளில் இந்த சிறப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்,
இந்த அதிரடி வேட்டையின்போது சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த 764 ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தனிப்படை போலீசார் அதிரடி சோதனை செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்து வருவதாக எச்சரித்தனர். இனி குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
அப்போது குற்றசெயல்களில் ஈடுபட்டதால் கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 14 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.