குழாய் அமைக்க எதிர்ப்பு: 150 குடும்பத்தினர் பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை
- ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
- கழிப்பறை உள்ள இடத்தில் ‘செப்டிக்டேங்’ அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
கழிவறை கட்டிடம் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்த முடியாமல் மூடியே கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கழிவறையில் இருந்து செல்லும் குழாயை அருகில் உள்ள கால்வாயில் இணைக்க முடியாததே காரணமாக கூறப்படுகிறது.
தாழங்குப்பம் அருகே உள்ள நெட்டுக்குப்பம் வழியாக கழிவறை கழிவுநீர் குழாயை கொண்டு சென்று அருகில் உள்ள கால்வாயில் இணைக்கும் சூழல் உள்ளது.
ஆனால் இதற்கு நெட்டுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு சாதிபாகுபாடு காரணம் என்றும் கூறப்படுகிறது. இயற்கையாகவே தாழங்குப்பம் பகுதி உயரமான இடம் ஆகும். இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் நெட்டுக்குப்பம் வழியாக செல்லும்.
தற்போது கழிவறை பகுதியில் இருந்து குழாயை நெட்டுக்குப்பம் வழியாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீட்டை ஒட்டி சுவர்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதனால் வேறு வழியின்றி மாற்றுப்பாதையை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனினும் மாற்றுப்பாதையில் குழாய்கள் பதித்தால் மேடான பகுதி வாரியாக கழிவு நீர் பாய்ந்து செல்வதில் சிரமம் ஏற்படும் சிக்கலும் உள்ளது.
இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, 'தாழங்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் இருந்து குழாய் பதிப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷ்னரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர கோரி உள்ளோம்.
விரைவில் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்படும்' என்றார்.
இது குறித்து தாழங்குப்பத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'நான் பிறந்த முதலே இங்கு தான் வசிக்கிறேன். நெட்டுக்குப்பத்தில் உள்ள சிலர் கழிவுநீர் குழாய் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பூமிக்கடியில் குழாய் சென்றாலும் தங்கள் பகுதி வழியாக குழாய் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாதிய அவதூறுகளை கூறுகிறார்கள்' என்றனர்.
மற்றொருவர் கூறும் போது, 'இந்த கழிவறை மிகவும் பழமை யானது. கடந்த 3 ஆண்டு முன்பு இதனை சீரமைக்க தொடங்கியதும் பிரச்சினை ஏற்பட்ட ஆரம்பித்தது. முன்பு கழிவறை அருகே வீடுகள் இல்லாததால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. தற்போது நெட்டுக்குப்பம் அருகே கழிப்பறை பக்கத்தில் ஏராளமான வீடுகள் வந்துவிட்டன. இதனால் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுக்கழிப்பறை இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்' என்றார்.
இதற்கிடையே கழிப்பறை உள்ள இடத்தில் 'செப்டிக்டேங்' அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.