அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15-ந் தேதி வேலைநிறுத்தம்
- கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்த குமார், பீட்டர் அந்தோணிசாமி, கே.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.
அதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் வருகிற 15-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது, அதே நாளில் வட்டக் கிளைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த 2 போராட்டங்களையும் மிகவும் வலுவாக நடத்திடும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மையங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை நடத்துவது எனவும், வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வரும் அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான பிரசாரங்கள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.