இலங்கையில் இருந்து அகதிகளாக 2 பேர் தனுஷ்கோடி வருகை: போலீசார் விசாரணை
- இலங்கையில் இருந்து படகு மூலம் 2 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
- கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெடுக்கடி காரணமாக உணவுப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து தனுஷ்கோடி வந்துள்ளனர்.
தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். அனைவரையும் பாதுகாப்புடன் அழைத்து சென்று உரிய விசாரணைக்கு பின் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் தனித்தனி வீடுகள் வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து படகு மூலம் 2 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது58), தலைமன்னார் பகுதியை சேர்ந்த நேச பெருமாள் (60) என்பதும் தெரியவந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.