பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி- படுகாயம் அடைந்த 4 நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை
- திருவனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு குற்றாலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
- 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
களக்காடு:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி சேர்மன் தெருவை சேர்ந்தவர் ஆசிக் அலி. இவரது மகன் சேக் அப்துல்லா(வயது 25).
இவர் வார விடுமுறையை ஒட்டி அப்பகுதியை சேர்ந்த தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அமீர் அப்பாஸ்(25) உள்பட 5 பேருடன் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலாவை முடித்து விட்டு செல்லும் வழியில் அவர்கள் குற்றாலம் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு குற்றாலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
குமரி-நெல்லை 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஷேக் அப்துல்லா ஓட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிருஷ்ணன்புதூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு சாலையோரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த 14 டயர் கனரக டிரெய்லர் லாரியின் பின்னால் ஷேக் அப்துல்லா ஒட்டி வந்த கார் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த ஷேக் அப்துல்லா மற்றும் அமீர் அப்பாஸ் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அதே காரில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அகமதுபாஷா, ஆசிம்கான் மற்றும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு இரவு நேர ரோந்து போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் நாங்குநேரி போலீசாரும் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு முன்பக்க இருக்கையில் இறந்த நிலையில் இருந்த ஷேக் அப்துல்லா மற்றும் அமீர் அப்பாஸ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காயம் அடைந்த 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரெய்லர் லாரி டிரைவரான மதுரை ஒத்தக்கடை அய்யப்ப நகரை சேர்ந்த லெட்சுமணன்(59) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லெட்சுமணன் குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து மின்கம்பங்கள் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார்.
அப்போது கிருஷ்ணன்புதூர் அருகே லாரியின் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. இதனால் அவர் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டயரை கழற்றி உள்ளார். அப்போது தான் லாரியின் பின்புறத்தில் கார் மோதி இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.