செய்திகள்

வேலூரில் 2-வது நாளாக பலத்த மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

Published On 2016-07-26 11:44 IST   |   Update On 2016-07-26 11:44:00 IST
வேலூரில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கோவிலில் தஞ்சமடைந்தனர்.
வேலூர்:

வேலூரில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் வேலூர் மற்றும் சுற்று வாட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் இந்த மழை சுமார் 6.30 மணியில் இருந்து 8 மணி வரை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஆற்காட்டில் அதிகட்சமாக 76.5 மி.மீ மழை பெய்தது. ஆம்பூர், மேல்ஆலத்தூர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழையால் வேலூர் கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பாதுகாப்பு கருதி தங்கி இருந்தனர்.

தொடர்ந்து 2 நாட்கள் பெய்து வந்த மழையால் சைதாப்பேட்டையில் உள்ள சலவை தொழிலாளி கருணாகரன் (வயது 55) என்பவரது மாடி வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்தது.

மேலும் கன்சால்பேட்டை இந்திரா நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை இரவு முழுவதும் லேசாக தூறிக் கொண்டே இருந்தது.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மி.மீ வருமாறு:-

வேலூர்-47.1

ஆலங்காயம்-22.8

அரக்கோணம்-4.3

வாலாஜா-32.2

திருப்பத்தூர்-6.3

ஆற்காடு-76.5

குடியாத்தம்-21.4

மேல்ஆலத்தூர்-60.2.

Similar News