செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் 4 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: 4 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

Published On 2016-08-22 10:30 GMT   |   Update On 2016-08-22 10:30 GMT
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கீழ்தளத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பெண் தனது 4 குழந்தைகள் மீது மண்எண்ணெய் ஊற்றி அவர்களுடன் தானும் சேர்ந்து தற்கொலை செய்யப்போவதாக கூச்சல் போட்டார்.

உடனே காவலர்கள் அவர்கள் 5 பேர் மீதும் தண்ணீர் ஊற்றி வேறு இடத்துக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் கீரைக்கடை தெருவை சேர்ந்த எனது பெயர் முத்துலட்சுமி. எனக்கும் மருதமுத்து என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கொடைக்கானல் பூண்டி கிராமம் போளூரில் எனது தந்தை ராமன் வசித்து வருகிறார்.

எனக்கு 10 வயது இருக்கும்போதே என் தாய் அழகம்மாள் இறந்து விட்டார். என் தாயின் 20 பவுன் நகையை வைத்து எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு என் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு தான் கஷ்டப்படுவதாக கூறி என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் என் தந்தை வாங்கி சென்று விட்டார். மீண்டும் அதனை நான் கேட்டபோது அதை தர மறுத்ததோடு என்னை தரக்குறைவாக திட்டினார்.

மேலும் சொத்தில் உனக்கு பங்கு கிடையாது, நகையும் கிடையாது. நீ எனக்கு பிறக்கவே இல்லை என பேசி வருகிறார். 4 குழந்தைகளுடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் எனக்கு தந்தையிடம் இருந்து நகையை பெற்று தர வேண்டும்.

இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் தனது கோரிக்கையை மனுவாக அளித்து சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் 4 குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News