செய்திகள்

ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு?: மேலும் 3 வாலிபர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

Published On 2016-10-08 07:06 GMT   |   Update On 2016-10-08 07:06 GMT
ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் மேலும் 3 வாலிபர்களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கேரள மாநிலம் கண்ணூர் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பில் இருப்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் உறுதி செய்தது.

இதையடுத்து அங்கு சோதனை நடத்தியதில் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த அபுபசீர் (29) உள்பட 6 பேரை கைது செய்தது.

தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் அபுபசீருடன் கோவையை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2-ந்தேதி தேசிய புலனாய்வு அதிகாரிகள் உக்கடம் ஜி.எம்.நகரில் உள்ள 2 வீடுகளில் சோதனை செய்தனர்.

மேலும் அங்கு இருந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 8 பேரிடமும் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த 2 பேர், குனியமுத்தூரைச் சேர்ந்த ஒருவர் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மொத்தம் 11 வாலிபர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறனர்.

இந்த நிலையில் மேலும் 3 வாலிபர்களை பிடித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுவரை 14 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் இன்றும் 7-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, கேரளாவில் கைது செய்யப்பட்ட அபுபசீருக்கு கோவையில் இருக்கும் சிலர் ஏதேனும் உதவி செய்தார்களா? எந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

Similar News