செய்திகள்

சங்கரன்கோவில் தொழில் அதிபர் நெல்லை தனியார் விடுதியில் மர்ம மரணம்

Published On 2017-01-15 13:22 GMT   |   Update On 2017-01-15 13:22 GMT
நெல்லை தனியார் விடுதியில் சங்கரன்கோவில் தொழில் அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் ஞானமுத்து (வயது65). இவர் ‘பிளாஸ்டிக் பை’ தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு நெல்லை வந்தார். இங்கு நெல்லை கொக்கிர குளம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று மாலை நீண்ட நேரம் ஞானமுத்து அறையை விட்டு வெளியே வராததால், லாட்ஜ் ஊழியர் அறைக்கதவை தட்டினார். அப்போது கதவு திறந்து கிடந்தது. கழிவறை வாசலில் ஞானமுத்து தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள், பாளை போலீசுக்கும், ஞானமுத்து வின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்- இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஞானமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில் தொழில் அதிபர் ஞானமுத்துவுடன் ஒரு பெண்ணும் லாட்ஜில் தங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அவரிடம் இருந்து அதிக பணம் அல்லது தங்க சங்கிலியை பறிக்கும் நோக்கில் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு இந்த கொலை சம்பவம் நடந்து இருக்குமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருடன் தங்கிய பெண் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு மேல் விசாரணை தொடங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Similar News