செய்திகள்

தீபா பேரவை நிர்வாகிகளுடன் சசிகலா ஆதரவாளர்கள் மோதல்

Published On 2017-02-10 01:50 GMT   |   Update On 2017-02-10 01:50 GMT
சசிகலா உருவபொம்மையை எரித்த தீபா பேரவை நிர்வாகிகளுடன் சசிகலா ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். உருட்டு கட்டையால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

தமிழக முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

சசிகலா முதல்-அமைச்சர் பதவி ஏற்கக்கூடாது, அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திருச்சி மாவட்ட தீபா பேரவை நிர்வாகிகள் நேற்று ஸ்ரீரங்கத்தில் கருப்பு கொடிகளுடன் ராஜகோபுரம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் சசிகலாவின் உருவபொம்மையை எரித்தபடி தூக்கிவந்தனர்.

அவர்கள் ராஜகோபுரம் அருகே வந்ததும் சசிகலாவின் உருவபொம்மையை கீழேபோட்டு, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உருவபொம்மையில் எரிந்த தீயை அணைத்தனர். இதுதொடர்பாக தீபா பேரவையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

அப்போது அங்கு சசிகலா ஆதரவாளர்கள் 3 பேர் திடீரென உருட்டு கட்டைகளுடன் ஓடிவந்தனர். அவர்கள் தீபா பேரவை நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது அவர்கள் தீபா பேரவையினரை உருட்டு கட்டைகளால் தாக்க முயற்சித்தபோது, குறுக்கே சென்ற பெண் போலீஸ் உள்பட 2 போலீஸ்காரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட சசிகலா ஆதரவாளர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Similar News