செய்திகள்

கோவில் விழாவில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2017-03-03 05:44 GMT   |   Update On 2017-03-03 05:44 GMT
செங்கம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 8 பேர் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடி காலனியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் படையலிட்டனர்.

சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளி பவனி வந்தார். முக்கிய வீதிகளில் தேர் ஊர்வலமாக வந்தது.

இதையடுத்து, இரவு அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வாண வேடிக்கை நடந்தது. ராக்கெட் வெடி உள்ளிட்ட பட்டாசுகள் கொளுத்தி வெடிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு குவியல் மீது தீப்பொறி விழுந்தது. தீ பிடித்ததில், பட்டாசுகள் வெடித்து சிதறின. கோவில் அருகில் இருந்த குடிசை வீடு மீதும் பட்டாசுகள் விழுந்தது.

அந்த பட்டாசுகள் வெடிக்கவில்லை. கூடியிருந்த கிராம மக்கள் சிலர், குடிசை மீது கிடந்த பட்டாசை அகற்ற முயன்றனர். அடுத்த சில நொடிகளில் பட்டாசுகள் வெடித்தன.

இதில் 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் அஜீத் (வயது 16), சூரியா (18), முருகன் (38), பாண்டியன் (38), பழனி (49) ஆகிய 5 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து பாய்ச்சல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்த லிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News