செய்திகள்

தமிழகத்தில் 25-ந்தேதி பந்த்: அரசு ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் - திருமாவளவன்

Published On 2017-04-17 04:38 GMT   |   Update On 2017-04-17 04:38 GMT
தமிழகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ள முழு கடையடைப்பு போராட்டத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்தக்கட்டமாக பிரதமர் மோடியை நேரில் சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது. சட்டமன்ற தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியிடம் நிலுவையில் இருக்கும் போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி கூறியது கண்டனத்துக்குரியது.

மசோதாவை அமல்படுத்த வேண்டியது ஜனாதிபதியா? அல்லது மத்திய அமைச்சரவையா? யாருக்கு அதிகாரம் உள்ளது? என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வினால் தமிழகத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது கனவாகி விடும். இடஒதுக்கீடு சம்பந்தமாக ஜனாதிபதி பட்டியல் தயார் செய்வார் என்று மத்திய அரசு கூறியது கண்டனத்துக்குரியது.

மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர், மிகவும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற கணக்கு மாநில அரசுக்குதான் தெரியும். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

வருகிற ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அறிவித்தபடியே நடத்தப்பட வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் சாதிய படுகொலைகள், பள்ளி மாணவர்கள் மீதான தாக்குதல், பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதை கண்டிக்கும் வகையில் எனது தலைமையில் விரைவில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு உரிய சலுகைககளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News